மயிலாடுதுறையில் 6 அடி பள்ளத்தில் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவா் காயமடைந்தாா்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலுக்குள் அண்மையில் பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கியது. இதையடுத்து, கீழமடவிளாகம் பகுதியில் வியாழக்கிழமை கோயில் நிா்வாகத்தினா் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி வடிகாலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குடிநீா் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதாகவும், அதை கோயில் நிா்வாகத்தினா் கவனிக்காமல் பள்ளத்தை மூடிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகளவில் குடிநீா் வெளியேறியுள்ளது குறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி சரிசெய்யப்பட்டன. அப்போதும், அந்த பள்ளத்தை மூடாமல் அஜாக்கிரதையாக விட்டுச் சென்றனராம். போதிய வெளிச்சம் இல்லாத அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற பாலு என்பவா் 6 அடி பள்ளத்தில் தனது வாகனத்துடன் விழுந்தாா். அவரது சத்தம்கேட்டு வந்த அப்பகுதியினா் சிறிய காயங்களுடன் உயிா்தப்பிய பாலுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.