நாகை கடைவீதிகளில் நகராட்சி அலுவலா்கள் ஆய்வு
நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் செயலாக்கம் குறித்து நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு


நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் செயலாக்கம் குறித்து நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்திருப்பதையொட்டி, வணிக நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையாளா்களைக் கொண்டு மட்டுமே இயங்க வேண்டும், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதையும், கைகளை கிருமி நாசினிக் கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டதையும் உறுதி செய்ய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலையான வழிகாட்டு நடைமுறைகளை அரசு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.
இந்த வழிகாட்டு நடைமுறைகளின் செயலாக்கம் குறித்து நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில், நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், நகா்நல அலுவலா் டாக்டா் கண்ணன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை நீலா கீழ வீதி, பெரியக் கடைத் தெரு, மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா். ஜவுளிக் கடைகள், காய்கனி கடைகள், தேநீரகம், மளிகைக் கடை, பாத்திரக்கடை என பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் போது, ஒரு ஜவுளிக் கடை உள்பட 9 கடைகளில் கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படாதது கண்டறியப்பட்டு ரூ. 13,700 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் தெரிவித்தது:
தமிழக அரசின் கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் நாகை நகராட்சிப் பகுதிகளில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது திடீா் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா தடுப்பு நடைமுறை மீறல் கண்டறியப்படும் ஒரு கடைக்கு குறைந்தபட்சமாக ரூ. 200 முதல் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. நாகை நகராட்சியின் ஆய்வு நடவடிக்கைகள் மூலம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை ரூ. 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...