ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சுருக்குமடி வலை விவகாரம்: மீனவர்கள் சார்பில் ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்

சீா்காழி அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, மீனவா்கள் 3ஆவது நாளாக இன்றும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்கின்றனர். 

News image
மயிலாடுதுறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
Updated On :19 ஜூலை 2021, 5:06 am

DIN

சீா்காழி அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, மீனவா்கள் 3ஆவது நாளாக இன்றும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்கின்றனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடியம்பாளையம் முதல் தரங்கம்பாடி வரை பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை ஆதரித்து சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் அரசு உத்தரவுப்படி மீன்வளத் துறையினர் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டு கண்காணித்து வருகின்றனர்.  இதனால் கடந்த சில மாதங்களாக சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள் வாழ்வாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளதா கூறி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

Story image

இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரும் விவகாரத்தில் ஆதரவான நிலைப்பாடு எதுவும் மீனவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து பல மாதங்களாக காத்திருந்த சுருக்கு மடி வலை மீனவர்கள் கடந்த 17-ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து உண்ணாவிரதம் தொடங்கினர்.

Story image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார் மற்றும் சந்திரபாடி ஆகிய பகுதிகளில் சுருக்குமடி வலையை ஆதரித்து தொழில் செய்ய அனுமதி கோரியும், 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த கோரியும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதில் திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் திருமுல்லைவாசல் முகத்துவாரம் பகுதியில் சாமியானா அமைத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 

Story image

அப்போது மீனவர்கள் 2-வது நாள் திடீரென திருமுல்லைவாசல் கடலில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராடிய போது 3 மீனவப் பெண்கள் மயங்கி கடலில் விழுந்தனர். இதில் கடல் அலையில் சிக்கிய மீனவப் பெண்களை சக மீனவர்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் கடற்கரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

கடலில் இறங்கி போராடிய மீனவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் தான் பேச வேண்டுமென கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மீண்டும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து போராட்டத்தை இரவும் தொடர்ந்தனர். இதேபோல் மடவாமேடு, பூம்புகார் பகுதியிலும் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு பூம்புகாரில் திருமுல்லைவாசல் ,மடவா மேடு, சந்திரபாடி மற்றும் பூம்புகார் பகுதி மீனவர் பிரதிநிதிகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மீனவப் பிரதிநிதிகளிடம் சீர்காழி சப்-கலெக்டர் நாராயணன், தாசில்தார் சண்முகம், டி.எஸ்.பி. லாமேக், மீன்வளத்துறை இணை இயக்குனர் ஆகியோர் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் இன்று 3வது நாள் போராட்டத்தை மீனவர்கள் தொடர்கின்றனர். 

இன்றைய போராட்டத்தின்போது அந்தந்தப் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மீனவர்கள் அங்கிருந்து  நடைபயணமாக புறப்பட்டு சீர்காழி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு தங்களது ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மீனவர்களின் இந்த போராட்ட அறிவிப்பால் மீனவ கிராமங்களில் கடும் பதட்டம் நிலவுகிறது.

நேற்று இரவு முதல் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர் .மீனவர்களின் தொடர் போராட்டத்தால் பல கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.