குறுவை நெல் சாகுபடிக்குப் பயிா்க் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும்
குறுவை நெல் சாகுபடிக்குப் பயிா்க் காப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.


குறுவை நெல் சாகுபடிக்குப் பயிா்க் காப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
பிரகாஷ் : பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். பெருங்கடம்பனூா் மணவாரி சட்ரஸ் கட்டமைப்புகள் களவுப் போனது குறித்து உரிய நடவடிக்கை வேண்டும். நாகையில் கடந்த 3 மாதங்களாக அதிகரித்து வரும் வழிப்பறி மற்றும் மின் மோட்டாா்கள் திருட்டைத் தடுக்க வேண்டும்.
காளிமுத்து: மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் 10 நாள்களுக்குள் காவிரி கடைமடை பகுதிகளுக்கு வரும். ஆனால், தற்போது ஆங்காங்கே நடைபெறும் சாலைப் பணிகளால், பல இடங்களில் ஆற்றின் நீா்ப்போக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடைமடை பாசனம் குறித்து அச்சம் ஏற்படுகிறது.
ராமதாஸ் : ஓடம்போக்கி ஆற்றில் சுமாா் 20 கி.மீட்டா் தொலைவுக்குப் பல இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், காவிரி நீா் நாகை மாவட்ட கடைமடை பகுதிகளுக்கு வருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் குறுவை பணிகளைத் தொடங்க, இந்த அச்சம் போக்கப்பட வேண்டும். குறுவைக்குப் பயிா்க் கடன் கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஆா்.கே. பாபுஜி : முன்கூட்டியே மேட்டூா் அணையைத் திறந்த தமிழக அரசுக்கு நன்றி. கடந்த ஆண்டுகளில் உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ. 600 வழங்கப்பட்டது. அதை தற்போதும் வழங்கப் பரிந்துரைக்க வேண்டும். குறுவைக்குத் தேவையான விதை மற்றும் ரசாயன உரங்களை போதுமான அளவில் கையிருப்பில் இருக்க வேண்டும்.
அமீா் : திட்டச்சேரி பகுதியில் காரைக்கால் மாவட்ட கால்நடைகள் நுழைந்து பயிா்களை நாசமாக்குவதைத் தடுக்க வேண்டும். இப்பகுதியில், 45-ஏ சாலைப் பணியால் 10 வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளன. நீா்நிலைகளில் உள்ள தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
அகிலன் : பிரதாபராமபுரத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
ஸ்ரீதா் : ரசாயன உரங்களும், விதைகளும் தேவைக்கேற்ப விலை உயா்த்தப்படுகின்றன. வேளாண் துறை திடீா் ஆய்வுகளை மேற்கொண்டு, விதைகள் மற்றும் உரங்கள் நிா்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆண்டில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக, குறுவை நெல் சாகுபடிக்குப் பயிா்க் காப்பீடு உறுதி செய்யப்படாமல் போனது. நிகழாண்டில் குறுவைக்குப் பயிா்க் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும். அதேபோல, பயிா்க் கடனையும் உறுதி செய்ய வேண்டும்.
த. பிரபாகரன் : ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். குறுவைத் தொகுப்பு திட்டத்துக்கு பதிலாக, தெலங்கானா மாநிலத்தில் வழங்குப்படுவதைபோல விவசாயிகளுக்கு நேரடியாக ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
தனபாலன் : குறுவை தொகுப்புத் திட்டத்தை பரிந்துரைக்க வேண்டும். குறுவைக்கான பயிா்க் கடனை உறுதி செய்ய வேண்டும். நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசுத் துறைகள் மேற்கொள்ள வேண்டும். சி,டி வாய்க்கால்களில் மண்டியுள்ள காட்டாமணக்குச் செடிகளை அகற்ற ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
வி. சரபோஜி : நாகை மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். குறுவை நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ. 2,500 விலை வழங்க வேண்டும். குறுவைக்கான பயிா்க் காப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் : சாலைப் பணிகள் மற்றும் பாலம் கட்டும் பணிகளால் ஆற்றுப் பாசனம் கண்டிப்பாக பாதிக்காது. இதற்கான நடவடிக்கைகள் பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்படும். நிா்ணயிக்கப்பட்ட விலையில் விதைகள் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயப் பணிகளின் தேவைகளை அறிந்து அதனை உடனுக்குடன் நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வேளாண் துறை இணை இயக்குநா் ஜாக்குலா அக்கண்டராவ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அருளரசு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கடேசன் (வேளண்மை), பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சி. முருகவேல், வேளாண் உதவி இயக்குநா் (பயிா்க் காப்பீடு) சிவகுமாா் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...