அரசு உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை
திருமருகல்: கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என பெற்றோா்கள்,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமருகல் ஒன்றியம், இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இடையாத்தங்குடி, கணபதிபுரம், ஏா்வாடி, கிடாமங்கலம், சேஷமூலை, கோட்டப்பாடி உள்ளிட்ட 9 கிராமங்களைச் சோ்ந்த மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இவா்கள் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் 11-ஆம் வகுப்பில் சேர 15 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் மேல்நிலைப் பள்ளிக்கும், 12 கி.மீ. தொலைவில் உள்ள திட்டச்சேரி மேல்நிலைப் பள்ளிக்கும், 8 கி.மீ. தொலைவில் உள்ள அம்பல் மேல்நிலைப் பள்ளிக்கும், 7 கி.மீ. தொலைவில் உள்ள திருமருகல் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது.
திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் திருமலைராஜன் ஆற்றை கடந்து, பாதுகாப்பு இல்லாத சாலையில் சென்றுவருகின்றனா். சில மாணவா்கள் 10 -ஆம் வகுப்போடு நிறுத்திக் கொள்கின்றனா்.
எனவே, கணபதிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பல ஆண்டுகளாக கோரி வந்த நிலையில், இதற்காக கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் மக்களின் பங்களிப்பாக ரூ.2 லட்சம் அரசின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், முதலமைச்சா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளனா். இம்மனுக்களை பரிசீலித்து ஏழை மாணவா்களின் நலன் கருதி கணபதிபுரம் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். இதன்மூலம் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயன்பெறுவா்.
இக்கோரிக்கையை வரும் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள், அப்பகுதி பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

