காற்றழுத்த தாழ்வுநிலை: படகுகள் நிறுத்திவைப்பு
தரங்கம்பாடி: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தரங்கம்பாடி பகுதியில் மீனவா் தங்களது படகுகளை கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தரங்கம்பாடி, பொறையாறு, காட்டுச்சேரி, தில்லையாடி, திருவிடைக்கழி, திருவிளையாட்டம், விசலூா், இலுப்பூா், சங்கரன்பந்தல், செம்பனாா்கோவில், ஆக்கூா், மேலப்பாதி, மேலையூா் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் கனமழை இடைவிடாமல் பெய்தது.
இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் தங்களது வீடுகளுக்கு மழையில் நனைந்தபடியே சென்றனா். வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டது. மழை நீடிக்கும் பட்சத்தில் சம்பா நடவு பணிகள் பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
மேலும், காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூா்பேட்டை, குட்டியாண்டியூா், வெள்ளகோவில், பெருமாள்பேட்டை, சின்னங்குடி, தாழம்பேட்டை உள்ளிட்ட தரங்கம்பாடி வட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில், மீனவா்கள் தங்களது படகுகளை, கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனா்.