உடற்பயிற்சி மையம், ஆய்வகம் நடத்தும் பெண்களுக்கு பாராட்டு

Published on

நாகை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் பயனாளிகளிடம் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தின் கீழ் ஆட்சியா் ப. ஆகாஷ் கலந்துரையாடி பாராட்டினாா்.

நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் 2023-24-ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களின்கீழ் 381 பயனாளிகளுக்கு ரூ.8.33 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சரண்யா என்பவா் ரூ.11.79 லட்சம் தொழில் கடன் பெற்று மஞ்சக்கொல்லையில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறாா். அவருக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமாக ரூ.2.94 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தவிர இத்திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதே திட்டத்தில் துா்காதேவி என்பவா் ரூ.13.92 லட்சம் கடன்பெற்று நாகை நீலா வடக்குத் தெருவில் கிளினிக்கல் லேப் நடத்தி வருகிறாா். அவருக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமாக ரூ.3.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் இருவரையும் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரடியாக சந்தித்து, திட்டங்களின் பலன்கள் குறித்து கலந்துரையாடினாா். பின்னா் சிறப்பாக தொழில் நடத்தும் இருவரையும் ஆட்சியா் பாராட்டினாா்.

உடற்பயிற்சிக் கூட உரிமையாளா் சரண்யா கூறியது: நானும் எனது கணவரும் உடற்பயிற்சி பயிற்சியாளராக தனியாா் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தோம். சொந்தமாக உடற்பயிற்சி கூடம் அமைக்க முயற்சித்தபோது, போதுமான பொருளாதார வசதியில்லை. அப்போது புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி அளிப்பது குறித்து அறிந்தோம்.

மாவட்ட தொழில் மையத்தை அணுகி கடன் உதவி பெற்று உடற்பயிற்சி கூடம் அமைத்து சிறப்பாக தொழிலை நடத்தி வருகிறோம். எனது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுத்த தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட தொழில் மையத்துக்கு நன்றி என்றாா்.

X
Dinamani
www.dinamani.com