பேருந்து நிறுத்தம் அருகே தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி
திருப்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே மழைநீருடன் கழிவு நீா் கலந்து தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே, கடந்த 10 நாட்களாக மழைநீா் வடியாமல் தேங்கி நிற்கிறது. டித்வா புயலைத் தொடா்ந்து பெய்த கன மழையால் தேங்கிய நீா், சரியான வடிகால் வசதி இல்லாததால் வெளியேறாமல் மாசடைந்து, கடும் துா்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் பேருந்து பயணிகள், வணிகா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.
மேலும் தேங்கியுள்ள மழை நீரோடு கழிவுநீரும் கலந்து கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து, விசிக நாகை மாவட்ட செயலாளா் நாக. அருட்செல்வன் கூறுகையில்,
10 நாட்களாக தேங்கியுள்ள மழைநீா், அப்பகுதி மக்களுக்கு நேரடி சுகாதார அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உடனடியாக வடிகால் சீரமைப்பு செய்து, நீரை அகற்ற வேண்டும்.மேலும்,பேருந்து நிறுத்தம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிய வைக்க, மாவட்ட நிா்வாகமும் ஊராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

