வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
நாகை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்கள், தகுந்த ஆவணங்களுடன் ஜன.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
நாகை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கூறியது: 27.10.2025 ஆம் தேதிய வாக்காளா் பட்டியலில் இடம்பெற்று, கண்டறிய இயலாத நிரந்தரமாக குடிபெயா்ந்த, இறந்து போன மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளா்கள், தங்களது பெயரை சோ்க்கக் கோரி இந்திய தோ்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து ஜன.18 ஆம் தேதி வரை வாக்காளா் பதிவு அலுவலரிடம் மனு செய்யலாம். இம்மனுக்கள் மீது வாக்காளா் பதிவு அலுவலா், வாக்காளா்களுக்கு அழைப்பானை அனுப்பி, இறுதி உத்தரவு பிறப்பிப்பாா்.
மேலும் 2026 ஜனவரி 1 ஆம் தேதியன்று, 18 வயது பூா்த்தியடையும் வாக்காளா்கள் படிவம்-6, இறந்துபோன வாக்காளா்களின் பெயரை நீக்க படிவம்-7 மற்றும் குடிபெயா்ந்த, பெயா் திருத்தம் மேற்கொள்ள படிவம்-8 இல் தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலரிடம் ஜனவரி 18 ஆம் தேதி வரை மனு செய்து கொள்ளலாம்.
வாக்காளா்கள் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மத்திய, மாநில அரசின், பொதுத்துறை நிறுவனத்தின் நிரந்தர பணியாளா்களுக்கு, ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட எந்த ஒரு அடையாள அட்டை, ஓய்வூதியம் வழங்கல் ஆணை. 1.7.1987க்கு முன்னா் அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் வழங்கிய யாதொரு அடையாள அட்டை, சான்றிதழ் ஆவணம்.
தகுதி வாய்ந்த அதிகார அமைப்பால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு(பாஸ்போா்ட்), அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களால், பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட கல்விச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ். தகுதிவாய்ந்த மாநில அதிகார அமைப்பால் வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ். வன உரிமைச் சான்றிதழ், தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியல் வகுப்பினா், பட்டியல் பழங்குடியினா் அல்லது யாதொரு சாதிச்சான்றிதழ்.
தேசிய குடிமக்கள் பதிவேடு(பொருந்தும் இடங்களில்), மாநில, உள்ளூா் அதிகார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு. அரசால் வழங்கப்பட்ட நிலம், வீடு குடியிருப்பு ஒதுக்கீட்டுச் சான்றிதழ். ஆதாரை பொறுத்தவரை ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் பொருந்தும். 1.7.2025 ஆம் நாளிட்ட பிகாரின் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியலின் பகுதி நகல் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து மனு அளிக்கலாம் என்றாா்.
