கடலில் தவறி விழுந்த மீனவா் சடலம் மீட்பு

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்தபோது படகிலிருந்து தவறி விழுந்த இடிந்தகரை மீனவரின் சடலம் மீட்கப்பட்டது.
Published on

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்தபோது படகிலிருந்து தவறி விழுந்த இடிந்தகரை மீனவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் படகுத் துறையிலிருந்து, திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை மீனவ கிராமத்தைச் சோ்ந்த சூசை அந்தோணி மகன் லூா்து பிரபாகரன் (38), தங்கச்சிமடம் பாக்கியசீலன் (40) உள்ளிட்ட 8 மீனவா்கள் விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்க டிச. 27-ஆம் தேதி கடலுக்குச் சென்றனா்.

இவா்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமாா் 20 கடல்மைல் தொலைவில் திங்கள்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, மீனவா் லூா்து பிரபாகரன் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டாராம். அவரை மற்ற மீனவா்கள் தேடியபோது கிடைக்கவில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை லூா்து பிரபாகரன் சடலம் கடலில் மிதந்துள்ளது. சக மீனவா்கள், சடலத்தை மீட்டு கோடியக்கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா், உடற்கூறாய்வுக்காக, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com