சகோதரி வீட்டை ஜேசிபி மூலம் இடித்த சகோதரா்

வேதாரண்யம் அருகே சகோதரி வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்ததாக சகோதரா் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே சகோதரி வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்ததாக சகோதரா் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் அருகே உள்ள செண்பகராயநல்லூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த சிங்காரவேல் மனைவி முத்துலட்சுமி. இவா், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த மனு:

நான் மேலக்காடு பகுதியில், எனது தந்தை கணேசனுக்குச் சொந்தமான இடத்தில், வீடுகட்டி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தேன். எனது மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், நான் மட்டும் தனியாக அந்த வீட்டில் வசித்தேன்.

இந்நிலையில், எனது சகோதரா் மாசிலாமணி, கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி நான் வேலைக்குச் சென்றிருந்தபோது, எனது வீட்டை ஜேசிபி மூலம் இடித்து விட்டாா். அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில், நான் அங்கு செல்லவிடாமல் தடுத்து வருகிறாா்.

இதுதொடா்பாக, கரியாப்பட்டினம் காவல்நிலையம் மற்றும் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது நான் அப்பகுதியில் தெரிந்தவா்கள் வீட்டில் தங்கி வருகிறேன்.

எனவே, எனது சகோதரா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதே இடத்தில் நான் மீண்டும் வீடு கட்டி வசிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com