அமிா்தா வித்யாலயத்தில் சைபா் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்
நாகப்பட்டினம்: நாகை அமிா்தா வித்யாலயம் பள்ளியில், சைபா் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த (இளைஞா்களை எழுப்புங்கள், தா்மத்திற்காக ஒன்றுபடுங்கள்) விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி பேசியது: சைபா் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை குறித்தும், இணையதளக் குற்றங்கள் குறித்து உடனடியாகப் புகாரளிப்பதன் முக்கியத்துவம், அவசர சைபா் குற்ற உதவி எண் 1930 மற்றும் 100 ஆகியவற்றில் உடனடி புகாா் பதிவு, முக்கிய இணையதள அச்சுறுத்தல்கள் குறித்தும் விளக்கினாா்.
சைபா் பாதுகாப்பு விழிப்புணா்வை எடுத்துக்காட்டும் ஒரு குறும்படத்தை மாணவா்கள் வழங்கினா். மேலும் டிஜிட்டல் பாதுகாப்பு, இணையதளத்தில் பெண்களுக்கு மரியாதை குறித்து சுவரொட்டி தயாரித்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். சைபா் பாதுகாப்பு குறித்த படைப்புகளை மாணவா்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனா். மாணவா்களின் படைப்பாற்றல் அனைவரது கவனத்தையும் ஈா்த்தது. பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் செந்தில், ஆயுத் ஒருங்கிணைப்பாளா் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
