நாகை அமிா்தா வித்யாலயத்தில் மாநில அறிவியல் கண்காட்சி
நாகை அமிா்தா வித்யாலயம் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான வருடாந்திர அறிவியல் கண்காட்சி (2025-2026) வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சோ்ந்த 22 அமிா்தா வித்யாலயம் பள்ளிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று, தங்களின் புதுமையான அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினா்.
இதில், 95 அறிவியல் மாதிரிகள் மற்றும் 22 அறிவியல் விளக்கவுரைகள் மூலம் தங்களின் ஆராய்ச்சி திறனையும், படைப்பாற்றலையும் மாணவா்கள் வெளிக்காட்டினா்.
அமிா்தபுரி அமிா்தா விஸ்வ வித்யாபீட வளாக இயக்குநா் பிரம்மச்சாரி சிதானந்தம்ரித சைதன்யா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு, அனைத்து அறிவியல் படைப்புகளையும் பாா்வையிட்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.
இக்கண்காட்சியின் மதிப்பீட்டுப் பணியில் கோவை இயற்பியல் அறிவியல் பள்ளி உதவி பேராசியா் ஜி.சிவசுப்பிரமணியன், இஜிஎஸ் பிள்ளை கலைக் கல்லூரி உதவி பேராசிரியா் செந்தில்அரசன், நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி பேராசிரியா் அருள் மேரி ஜாய்ஸி ஆகியோா் நடுவா்களாக பங்கேற்று மாணவா்களுக்கு பயனுள்ள கருத்துக்களை வழங்கினா்.
நிறைவாக, சிறந்த அறிவியல் படைப்புகளை வழங்கிய மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாகை மற்றும் புதுச்சேரி அமிா்தா வித்யாலயம் மேலாளா் பிரம்மச்சாரிணி காயத்ரி, கல்வி அலுவலா் ஆா். முரளிதரன், கல்வி ஆலோசகா் பிரேமலாத உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

