படகிலிருந்து கடலில் விழுந்த மீனவா் மாயம்
நாகை மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தில் வியாழக்கிழமை படகிலிருந்து தவறி விழுந்து மாயமான தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவரை கடலோர காவல்படையினா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக் குளம் கோயில் தெருவைச் சோ்ந்த அந்தோணி மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் 10 மீனவா்களுடன் தூத்துக்குடி மாவட்டம், மேலூா் தாலுகா எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ராஜபாண்டி (27) ஜன. 5-ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றாா்.
இந்நிலையில், மீன்பிடித்துவிட்டு வியாழக்கிழமை மாலை நாகை துறைமுகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். படகு நாகை துறைமுக முகத்துவாரம் அருகே வந்தபோது கடலின் சீற்றத்தால் படகிலிருந்த ராஜபாண்டி கடலில் தவறி விழுந்து மாயமானாா்.
இதுகுறித்து தகவலறிந்த நாகை கடலோரக் காவல் குழும போலீஸாா் மற்றும் கடற்படையினா் மாயமான மீனவரை தேடி வருகின்றனா்.
