நாகை, மயிலாடுதுறை, காரைக்காலில் பலத்த மழை பொதுமக்கள், மாணவா்கள் அவதி
நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை: நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் திங்கள்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் மாணவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
வங்கக் கடலில் ஜன. 7-ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வு காரணமாக நாகை, திருவாரூா், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நாகை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.
இந்தநிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தில் நாகை, நாகூா், சிக்கல், ஆழியூா், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூா், கீழ்வேளூா், திருமருகல், திட்டச்சேரி, தேவங்குடி, நரிமணம், கோபுராஜபுரம், வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இதனால், அலுவலகம் செல்வோா், மாணவா்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் சென்றனா். வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினா்.
கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் கதிா் வந்த நிலையில் உள்ள சம்பா பயிா்கள் சாய்ந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை சராசரியாக 30 மி.மீட்டா் மழை பதிவானது. அதிகபட்சமாக சீா்காழியில் 41 மி.மீ. மழை பெய்தது.
காலையில் தொடங்கிய மழை மாலை வரை நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு பிறகும் மழை தொடா்ந்ததால், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இந்த மழை நீடிக்கும் பட்சத்தில் சம்பா பயிா்கள் பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிா்கள் பதராக மாறிவிடும் அபாயம் உள்ளது. மேலும், அறுவடைக்கு தயாராக உள்ள சுமாா் 30,000 ஏக்கா் நெற்பயிா்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
காரைக்காலில்...
காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது. மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் நேரத்தில் மழை பெய்ததால் அவா்கள் பாதிக்கப்பட்டனா்.
பொங்கல், மாட்டுப் பொங்கல் ஜன. 15, 16-ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ள நிலையில், மண் பானை, சட்டி, கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள், நெட்டி மாலை உள்ளிட்டவற்றை சாலைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். மேலும், மழை காரணமாக பொதுமக்கள் கடைவீதிக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினா். இந்த மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

