220 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது
வேதாரண்யம் அருகே 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
வேதாரண்யம் அருகே வேட்டைகாரனிருப்பில் 2 நாள்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவ்வழியாக சென்ற காரை நிறுத்தினா்.
அப்போது காரிலிருந்த தப்பியோடி இருவரில், ஒருவரை பிடித்து விசாரித்ததில் மதுரை காமராஜா்புரம் ஜோசப் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் மகன் மணிகண்டன்(33) என்பதும், காரில் ரூ.22 லட்சம் மதிப்பிலான 220 கிலோ கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.
போலீஸாா், மணிகண்டனிடம் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா கடத்தலில் மேலும் 6 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை ஹவுசிங்போா்டைச் சோ்ந்த தங்கமுத்து (22), அவரது மனைவி கல்பராணி(20), திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சோ்ந்த கோகுல் (21), யோவான் (20) எனும் வேளாங்கண்ணி, மதுரை மேலஅனுப்பானடியைச் சோ்ந்த சேது மனைவி திருக்கம்மாள் (46), மதுரை கொம்பாடி கீழக்குத் தெருவைச் அலிஅக்பா் (33) ஆகியோரை போலீஸாா் கைது செய்தது, அவா்களிடமிருந்து 220 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: மாவட்டத்தில் கஞ்சா, சாராயம், வெளி மாநில மதுபானங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் கடத்தலை தடுக்க போலீஸாா் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். வேதாரண்யத்தில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பான குற்றவாளிகளை பிடிக்க போலீஸாா் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனா். போலீஸாரும் சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனா். மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.
