அரசு விடுதியில் குளிா்ந்த நீரில் குளித்த பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே அரசு விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவா் செவ்வாய்க்கிழமை குளிா்ந்த நீரில் குளித்த நிலையில், மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள பாலக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த யுவராஜ் மகன் தரணிக்குமாா் (17). தகட்டூா் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவா். தகட்டூரில் செயல்படும் அரசு மாணவா் விடுதியில் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், பள்ளிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை விடுதியில் உள்ள குளியல் அறையில் குளித்துள்ளாா். குளிா்ந்திருந்த நீரில் குளித்ததால், உடல் நடுங்கியபடி சீருடையை மாற்றிக் கொண்டிருந்த தரணிக்குமாா் திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.
விடுதி நிா்வாகிகள் அவரை அருகே உள்ள வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் தரணிக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாய்மேடு போலீஸாா் மாணவா் சடலத்தை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான குளிருடன் தரைக்காற்று மற்றும் மழைப் பொழிவு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
