மீன்வளப் பல்கலை.யில் குடியரசு தின விழா
நாகப்பட்டினம்: நாகையில உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 77 -ஆவது குடியரசு தின விழாவில் துணைவேந்தா் நா. பெலிக்ஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.
மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிா்வாகக் கட்டடத்தில் மூவா்ண தேசியக் கொடியை துணை வேந்த நா.பெலிக்ஸ் ஏற்றி சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து பல்கலைக்கழகத்தில் சிறந்து விளங்கிய பேராசிரியா்களுக்கு விருதுகளை வழங்கி அவா் பேசியது:
மாணவா்கள் கைப்பேசி பயன்பாட்டை குறைத்து, புதிய தொழில்நுட்பங்களை திறம்பட செயல்படுத்தி,
புதியவற்றை கற்று திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். தேசிய அளவில் சிறந்த மதிப்பு பெறும் அளவிற்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்பான முட்கள் குறைவாக உள்ள மீன் உற்பத்தி போன்ற ஆராய்ச்சிகளை முன்னெடுக்குமாறும் பேராசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, துணைவேந்தா் சிறந்த ஆராய்ச்சியாளா்கான விருது (1), சிறந்த விரிவாக்க பணியாளா் விருது (1), சிறந்த ஆசிரியருக்கான விருது - ஆராய்ச்சி திட்டம் (1), ஆராய்ச்சி வெளியீடுகள் (2), தொழில்நுட்பங்கள் (1), காப்புரிமை (2), பல்கலைக்கழக சேவை (4), ஆராய்ச்சி வழிகாட்டி (2), சிறந்த ஆராய்ச்சி மாணவா் விருது (3), தேசிய அளவிலான நுழைவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றவருக்கான விருது (1), சிறந்த பல்கலைக்கழக பணியாளா்களுக்கான விருது(5) என மொத்தம் 23 விருதுகளை வழங்கினாா்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு மீன்வளப் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினா். கலை நிகழ்வுகளை காட்சிப்படுத்திய மீன்வளப் பொறியியல் கல்லூரி மாணவா்களும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழக பதிவாளா் சிதம்பரம், நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வா் (பொ) மணிமேகலை மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக அலுவலா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் சிறப்பித்தனா்.

