நாகை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த வாய்மேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள்.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த வாய்மேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள்.

அணுகு சாலைக்கு நிலங்கள் கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில், சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அணுகு சாலை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
Published on

வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில், சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அணுகு சாலை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வேதாரண்யம் வட்டம், வாய்மேடு கிழக்கு கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு, விளை நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை தவிர வேறு எந்த வருமானமும் இல்லை.

இந்நிலையில் தென்னடாா் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழில் பூங்காவிற்கு, எங்கள் நிலங்கள் வழியாக, அணுகு சாலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, வாய்மேடு கிராம நிா்வாக அலுவலரிடம் இருந்து விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக 7 ஹெக்டோ் நில எடுப்பு செய்ய உள்ளதாக தெரியவருகிறது.

தென்னடாா் கிராமத்துக்கு பிரதான சாலையான வேதாரண்யம்- முத்துபேட்டை சாலையில், தகட்டூா் கடைத் தெருவில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் சாலை உள்ளது. தற்போது நில எடுப்பு செய்ய உள்ள சாலைக்கு 400 மீ. தொலைவில் உள்ள இலக்குவனாா் பள்ளி சாலை வழியாகவும், அதற்கு அடுத்து சுமாா் 250 மீ. தூரத்தில் உள்ள வெட்டியான் சாலை வழியாகவும் திட்டத்தை செயல்படுத்தலாம்.

ஆனால் எங்களது விளைநிலங்களின் ஊடாக சாலை அமைத்தால் அப்பகுதியில் விளைச்சல் பாதிக்கப்படும். மேலும் நில எடுப்பு போக மீதியுள்ள நிலங்கள் விவசாயத்திற்கு பயன்படாமல் பயனற்ாகிவிடும்.

நாகை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற நில எடுப்பு திட்டங்கள் விவசாயத்தை முற்றிலும் அழிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியரிடம் ஏற்கெனவே 5 மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளா் நேரில் வந்து ஆய்வு செய்ய பரிந்துரைக்கிறேன் என்று ஆட்சியா் தெரிவித்தாா். ஆனால், இதுவரை ஆய்வு செய்யவில்லை.

எனவே, மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து பாா்வையிட்டு, விளைநிலங்கள் பாதிக்காமல் மாற்றுப் பாதை மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com