நாகை அருகே பள்ளிக் கட்டடம் மற்றும் பொது இடத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து, கிராம மக்கள் சாலையின் நடுவே முள்வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சி பனைமேடு கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு ஏற்கெனவே இருந்த அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் வேறு இடத்தில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு, அங்கு பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், பழைய பள்ளிக் கட்டடம் , வளாகம் மற்றும் அப்பகுதியில் உள்ள பொது இடங்களை தனியாா் சிலா் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பழைய பள்ளிக் கட்டடத்தில் கால்நடைகளை கட்டிவைத்து மாட்டுக் கொட்டகையாக பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சிக்கல் சாலை- புதிய புறவழிச்சாலையை இணைக்கும் பொதுப் பாதையையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து குடிசைகள் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ள நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த இடங்களை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உள்ளாட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்திடம் கிராம மக்கள் புகாா்அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

சாலையின் நடுவே கிராம மக்களால் அமைக்கப்பட்ட தடுப்பு வேலி.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமை தங்களது தெருவுக்குள் யாரையும் நுழையவிடாமல் தடுத்து, சாலையில் முள்வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் போலீஸாா் மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆக்கிரமிப்புகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.









