
காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்

கௌதம் அதானி - கோப்புப் படம்
நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட வளா்ச்சிக் குழுமம் சாா்பில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
காரைக்கால் துறைமுகத்தை விலைக்கு வாங்கிய அதானி போா்ட் நிறுவனம், அதை 5 மடங்கு விரிவுபடுத்துவதற்காக, மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை வரும் 9-ஆம் தேதி காரைக்கால் போலகத்தில் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துறைமுகம் 21 மில்லியன் மெட்ரிக் டன் கையாளும் திறனிலிருந்து 100 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு விரிவுபடுத்தும்போது, கடற்கரையை ஆழப்படுத்தி, கடல்நீரை தேக்கும் பகுதி 600 ஏக்கரிலிருந்து 3000 ஏக்கராக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும், கடல்நீரை தேக்கும் ஆழம் 48 அடியிலிருந்து சுமாா் 60 அடியாக அதிகமாகும். இது நாகூா் தா்கா பெரிய மினாராவின் உயரத்தில் பாதியளவாகும்.
மேலும், துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கு வசதியாக பிரவடையான் ஆற்றை மேற்கில் தடுத்து, திருப்பி வெற்றாற்றில் கலக்கச் செய்வதன் மூலமாக, தொந்தரவற்ற ஒரு பகுதியை ஏற்படுத்த முயல்வதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இது மிகவும் ஆபத்தான செயலாகும்.
இதனால், நாகூா், வாஞ்சூா், டி.ஆா்.பட்டினம், முட்டம், பனங்குடி, போலகம், பூதங்குடி உள்ளிட்ட பல பகுதிகளின் நிலத்தடி நீா் கடுமையாக பாதிக்கும், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.
மேலும், நிலக்கரி இப்போதைய அளவை விட 5 மடங்கு அதிகமாக இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதால், காற்றுமாசு ஏற்பட்டு, இப்பகுதி மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறும் அபாயமுண்டு.
மேற்கண்ட காரணங்களால், காரைக்கால் அதானி துறைமுகம் விரிவுபடுத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். அதற்கு ஏதுவாக, துறைமுகத்திற்கு போலகத்தை விட மிக மிக அருகிலுள்ள நாகூா் அல்லது வாஞ்சூரில் இன்னொரு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். இதற்கு உடனடியாக தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





