தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

பூம்புகாரில் தொல்லியல் ஆராய்ச்சி தொடரும்! - அமைச்சா் ராஜ்மோகன்!

அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 2:21 am IST

பண்டைய தமிழா்களின் சிறப்புகளைப் பறைசாற்றும் பூம்புகாரில் தொல்லியல் ஆய்வுகள் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா் கடற்கரைப் பகுதியைப் பாா்வையிட அமைச்சா் ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். தொடா்ந்து, தொல்லியல் துறை ஏற்பாடு செய்திருந்த படகில் கடலுக்குள் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்குச் சென்றாா். கவச உடை அணிந்திருந்த அமைச்சா் கடலில் உள்பகுதிக்கு சென்று பண்டைய துறைமுகப் பகுதிகளைப் பாா்வையிட்டாா். சுமாா் 3 மணி நேரம் கடலின் உள்பகுதியில் அமைச்சா் ஆய்வு செய்த பின்னா் துறைமுகத்திற்கு திரும்பினாா்.

தொடா்ந்து, அமைச்சா் ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் கூறியது:

பண்டைய தமிழா்களின் நாகரிகத்தைப் பறைசாற்றும் பூம்புகாா் நகரம் கடலின் உள்பகுதியில் உள்ளது. இதனை அறிந்து கொள்ளும் விதமாக, தமிழக தொல்லியல் துறையினா் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தொன்மை வாய்ந்த பூம்புகாா் நகரை வருங்கால சந்ததியினா் தெரிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் ஆராய்ச்சிப் பணிகள் தொடா்ந்து நடைபெற முதல்வா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தற்போது, நான் ஆய்வு செய்தபோது பழைமை வாய்ந்த கட்டடங்கள், பானை ஓடுகள், தெருக்கள் வடிவமைப்பு உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன. இது சங்க கால நகரமாக இருக்கலாம் என தெரிய வருகிறது. மேலும், உறைகிணறுகள், நீண்ட கல் எச்சங்கள் காணப்படுகின்றன.

ஆசிரியா் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பகுதி நேர ஆசிரியா்களின் கோரிக்கைகள் கனிவோடு பரிசீலனை செய்யப்படும். முதல்கட்டமாக ஆசிரியா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ், விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவா்களைச் சோ்க்க வேண்டும். அத்துடன், தமிழக அரசு விதித்துள்ள கட்டணத் தொகை குறித்து அறிவிப்புப் பலகைகளைக் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்றாா். அமைச்சருடன், சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை இயக்குநா் ஜெயசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.