/

தேசிய நெடுஞ்சாலையாகுமா கோடியக்கரை-தஞ்சை சாலை?

கோடியக்கரையில் இருந்து வேதாரண்யம்-வாய்மேடு, திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி ,வடுவூர்-தஞ்சாவூர் வரையிலான 110 கி.மீட்டர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:39 am

அ. ரவி

கோடியக்கரையில் இருந்து வேதாரண்யம்-வாய்மேடு, திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி ,வடுவூர்-தஞ்சாவூர் வரையிலான 110 கி.மீட்டர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிப்பது போன்று, கோடியக்கரையில் பாக்ஜலசந்தியும், வங்காள விரிக்குடாவும் இணைகின்றன, தண்டியில் உப்பு சத்தியாக்கிரகத்தை மகாத்மாகாந்தி மேற்கொண்டபோது, திருச்சியில் இருந்து இவ்வழியாக ராஜாஜி உப்புசத்தியாக்கிரக யாத்திரை மேற்கொண்டார். ஆடி, தை, மகாளய அமாவாசை காலங்களில் பித்ருக்களுக்கு முன்னோர் வழிபாடு செய்யும் சேது கடலும் இங்கு அமைந்துள்ளது.

வரும் ஆண்டு பிப்ரவரி 8-இல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகோதய அமாவாசையின்போது நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரயில்பாதை திட்டப் பணிகள் நிறைவடைய இன்னும் பல ஆண்டுகளாகும் நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், சரக்குப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்துக்கு சாலை வழியே பிரதானமாக உள்ள நிலையில், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் புறவழிச் சாலைகள் இல்லாமையால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உப்பு, சவுக்கு லாரிகள் இச்சாலையைப் பயன்படுத்துகின்றன. கோடியக்கரை, ஆறுகட்டுத்துறை பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் கடல் மீன்களும் இவ் வழியாகவே வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். குறுகிய சாலையாக அமைந்துள்ள காரணத்தால் அடிக்கடி சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவை, பழனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், ஊட்டி, கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு செல்ல இப்பாதையையே பயன்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையும், திருத்துறைப்பூண்டி வழியாக செல்வதால், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கு செல்வதற்கும், கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணைப்பு சாலையாகவும் இச்சாலை விளங்குகிறது.

இதனால், கோடியக்கரை-தஞ்சை வரையிலான 110 கி.மீட்டர் தொலைவு சாலையை தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தேசித்து வாகன செறிவு குறித்த ஆய்வுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியது. இயற்கை பேரிடர் காலங்களில் துயர்துடைப்புப் பணிகளுக்கும் இச்சாலையைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், அதிகரித்து வரும் வாகன நெரிசல், போக்குவரத்தில் காலவிரையம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு உடனடியாக தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.