/

திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர் திருட்டை தடுக்க தனி குற்றப்பிரிவு தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி நகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிகழும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க, காவல் துறையில் தனியாக குற்றப்பிரிவு

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:09 pm

அ. ரவி

திருத்துறைப்பூண்டி நகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிகழும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க, காவல் துறையில் தனியாக குற்றப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டியில் கடந்த சில மாதங்களாக  திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ரயில்வே ஊழியர், நீதிபதி, வருவாய் ஆய்வாளர், மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியர், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர், மொத்த விற்பனைக் கடை, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆகியோர் வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடிக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் நகராகவும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரமாகவும் திருத்துறைப்பூண்டி உள்ளது.
காவல் துறை அலுவலகம்: திருத்துறைப்பூண்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திருவாரூர், குடவாசல், வேதாரண்யம் பகுதி காவல் நிலையங்களை உள்ளடக்கிய காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ளது. மேலும், இங்கு வட்ட காவல் ஆய்வாளர் அலுவலகம், மதுவிலக்குஅமல் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. இதில், திருத்துறைப்பூண்டி நகர காவல் நிலையத்தில் மட்டும் தற்போது காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளது.
இங்கு, ஊரக காவல் நிலையம் அமைக்கும் அளவுக்கு கிராமங்களும், மக்கள் தொகையும் இருந்தபோதிலும் இன்னும் ஊரக காவல் நிலையம் அமைக்கப்படாதது பெரும் குறையாக உள்ளது.
அதிகரிக்கும் திருட்டு... திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டின் பூட்டை உடைத்து 20-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வங்கியில் பணம் எடுத்து வரும் நபர்களைக் குறிவைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி நடைபெறும் வழிபறி சம்பவங்களும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில்  சங்கிலித் திருட்டு, பிக்பாக்கெட், இருசக்கர வாகனங்கள் திருட்டு போன்றவையும் அதிகரித்து வருகின்றன. இதில் ஒரு சில திருட்டு சம்பவங்களில் மட்டுமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற வழக்குகள் நீண்ட நாள்களாக விசாரணை நிலையிலேயே உள்ளன.
கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், அபாய எச்சரிக்கை மணி ஆகியவை பெயரளவுக்குத்தான் பொருத்தப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் செயல்படாத நிலையிலேயே உள்ளன.
காவலர்கள் பற்றாக்குறை...  திருத்துறைப்பூண்டி நகர காவல் நிலையத்தில் ஏற்கெனவே காவலர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான காவலர்களிலும் மருத்துவ விடுப்பு, நீதிமன்றப் பணி, கைதிகளின் வழி நடைக்காவல், புறக்காவல் நிலையப் பணி, முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது பாதுகாப்பு, கோயில் திருவிழா பாதுகாப்பு என பணியமர்த்தப்படுவதால், கண்காணிப்பு பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டம், மத மோதல்கள் போன்றவை அதிகம் நிகழும் சூழ்நிலை உள்ளதால், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
குற்றப்பிரிவு: திருத்துறைப்பூண்டியில் இத்தகைய நிலையைக் கருத்தில் கொண்டே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே காவல் துறையில் குற்றப்பிரிவுக்கென தனியாக ஓர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், 2 தலைமைக் காவலர்கள் மற்றும் 6 காவலர்கள் அடங்கிய குற்றப்பிரிவு தனியாக செயல்பட்டு வந்தது.
இவர்கள் குற்றங்களை உடனடியாக கண்டு பிடிப்பதிலும், மேலும் சந்தேகப்படும் குற்றவாளிகள் மற்றும் தொழில் முறை குற்றவாளிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்ததுடன், குற்றங்களின் தன்மை மற்றும் தடயங்களை வைத்தே குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதிலும், தனித்திறமை மிக்கவர்களாக இருந்ததால், பெரும்பாலான திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட்டன. ஆனால், தற்போது இந்த பிரிவு இல்லை. இதனால், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பொதுமக்கள் கோரிக்கை...
தற்போது, மாவட்ட அளவில் குற்றப்பிரிவு இருந்தபோதும், அவை பெரிய திருட்டு சம்பவங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் நிலை உள்ளது. இதில், காவல் துறையினரை மட்டும் குற்றம் சொல்லி பலனில்லை. அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத சமயங்களில் மட்டுமே குற்றச் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் நிலை உள்ளது.
எனவே, பெருகிவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, முன்பு செயல்பட்டதுபோல் ஓர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தலைமையில் போதிய காவலர்களை பணியமர்த்தி திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுப்பதுடன் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைக் கண்டுபிடிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து வர்த்தகர் சங்கத் தலைவர் கே .எஸ். செந்தில்குமார் கூறியது:
திருத்துறைப்பூண்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி காலியாகி 3 மாதங்களுக்கும் மேலாகியும் இன்னும் அப்பதவி கூடுதல் பொறுப்பாகவே உள்ளது. காவலர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால், திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறைந்தப் பரப்பளவில் அதிக மக்கள்தொகை உள்ள பகுதியாக திருத்துறைப்பூண்டி விளங்கிய போதிலும், இங்கு நகர காவல் நிலையம் மட்டுமே உள்ளது. கூடுதலாக ஊரக வட்ட காவல் நிலையம் அமைக்கப்படவேண்டும். மேலும் குற்றப்பிரிவு முன்பு செயல்பட்டதைப்போல் தனியாக ஓர் ஆய்வாளர் தலைமையில் செயல்படவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.