ஓஎன்ஜிசி பணியால் எந்தவித பாதிப்பும் இல்லை: விவசாய சங்கங்கள் தீர்மானம்

திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசியால் நடைபெறும் பணிகளால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று விவசாய சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. 
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசியால் நடைபெறும் பணிகளால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று விவசாய சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. 
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி பணிகள் போதிய பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது, இதனால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை, ஓஎன்ஜிசிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தவும், எரிபொருள் தேவையில் தன்னிறைவு பெறவும் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும், இம்மாதம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் ஓஎன்ஜிசி தொழிலாளர் மாநாட்டில் அனைத்துச் சங்கங்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
முன்னதாக கூட்டத்தில் பல்வேறு அமைப்பு சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் பேசியது: கோட்டூர், குடவாசல், நன்னிலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓஎன்ஜிசியால் நடைபெறும் பணிகளால் எந்தவித பாதிப்பும் இல்லை.  சில போலி சங்கங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெருமளவில் பணம் பெற்றுக்கொண்டு வீண் வதந்திகளை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடையே பரப்புகின்றனர். இவர்கள்மீது தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
கூட்டத்துக்கு வெண்ணாறு பாசன விவசாய சங்கத் தலைவர் அய்யாறு தலைமை வகித்தார்.  ஆற்றுப் பாசன சங்கச் செயலர்  வீரசேகர் உள்ளிட்ட அனைத்து பாசன சபை கூட்டமைப்பு, நெல் உற்பத்தியாளர்கள் சங்கம், காவிரி பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கம், அனைத்து கட்டடத் தொழிலாளர்கள் சங்கம், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வாழ்வுரிமை சங்கம், அனைத்து விவசாய நல வாழ்வு பேரவை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com