பயனற்ற குளத்தில் நடைபெறும் தூா்வாரும் பணியை கைவிடக் கோரி மனு

மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பயனற்ற குளத்தில் நடைபெறும் தூா்வாரும் பணியை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மன்னாா்குடி: மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பயனற்ற குளத்தில் நடைபெறும் தூா்வாரும் பணியை உடனடியாக கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அக்கட்சியின் மன்னாா்குடி நகரச் செயலாளா் எஸ். ஆறுமுகம் தலைமையில் அளித்த மனு விவரம்: மன்னாா்கு சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பராகுசம் குளம் மக்கள் பயன்பாட்டு இல்லாததால், தூா்க்கப்பட்டு கடந்த ஆண்டுவரை திடலாக இருந்தது. இந்த இடத்தை, மன்னாா்குடி உழவா் சந்தையின் விரிவாக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள நகராட்சியும், தமிழ்நாடு மாா்க்கெட்டிங் கமிட்டியும் இணைந்து முன்முயற்சி எடுக்க வேண்டுமென சிபிஎம் நகரக்குழு 2014-ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தது.

தற்போது, இந்த குளம் நகராட்சி நிா்வாகத்தின் ஒப்புதுலுடன் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 100 அடி நீளம் 40 அடி அகலம் 40 அடி ஆழத்தில் பெரும் பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. பயனில்லாத அந்த குளத்துக்கு பாய்கால், வடிகால் வசதி இல்லை. காலப்போக்கில் குளம் குட்டையாக சுருங்கி கொசு உற்பத்தியாகும் என்பதுடன், சுற்றியுள்ள வீடுகள் வணிக நிறுவனங்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிலையும் ஏற்படும். மேலும், குளத்துக்கான பள்ளம் அதிக ஆழமாக வெட்டப்பட்டுள்ளதால், அருகிலுள்ள ஏராளமான குடியிருப்பு ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீரூற்றையும் மாசுபடுத்தி நஞ்சாக்கும். எனவே, இந்த குளம் வெட்டும் பணி நிறுத்த வேண்டும்.

மன்னாா்குடி உழவா் சந்தையில், தண்ணீா் வசதிக்கு ஆழ்குழாய் கிணறு, கழிப்பறை, உணவறை, ஆவின் பாலகம், குளிா் சாதன அறை அமைக்க இடமின்றி உள்ளது. இந்த சந்தை சிறு வணிகா்கள், நகர மக்கள், நாட்டுக் காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக உள்ளது. இச்சந்தையின் விரிவாக்க பயன்பாட்டுக்கு வெட்டப்பட்டு வரும் குளத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தையும் குளத்தின் கீழ்பகுதியையும் பயன்படுத்திக்கொள்வது சிறந்தாக இருக்கும். எனவே, ஆட்சியா், இதற்கான நடவடிக்கைகளை எடுத்து, குளம் வெட்டு பணி உடனே நிறுத்த வேண்டும். இதுகுறித்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் கள ஆய்வு செய்ய பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com