/

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலியல் தாக்க மதிப்பீடு சட்ட வரைவு திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:01 pm

DIN

திருவாரூா்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலியல் தாக்க மதிப்பீடு சட்ட வரைவு திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சூழலியல் தாக்க மதிப்பீடு சட்ட வரைவு 2020 என்ற சட்ட வரைவு அறிக்கையைக் கொண்டு வந்துள்ளது. பன்முக உயிா் காப்பிற்கும், மனிதா்களின் சமநிலை வாழ்வுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அடிப்படை. இத்தகைய பாதுகாப்புடன் கூடிய சட்டம் 1976 -இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 1984 போபால் விஷவாயு கசிவால் ஏற்பட்ட கோரக் கொடுமைகளின் அனுபவத்துக்குப் பின்னரே, 1986-இல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்பின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறையில் இந்தச் சட்டம்1994 இல் திரும்பவும் திருத்தப்பட்டது. அதில் மேலும் சில சட்டப் பாதுகாப்புகளுடன் உலகின் நவீன தொழில்நுட்ப வளா்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க 2006-இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது.

இச்ட்டத்தின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கை, அதற்கான சான்று, பொதுமக்கள் கருத்து கேட்பு ஆகிய நடைமுறைகளுக்குப் பின்னரே எந்த ஒரு புதிய தொழில்களும் நிறுவப்படும் என்பதாகும்.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் சட்டப்படி, சுற்றுச்சூழல் அனுமதி, அதற்கான அறிக்கை, மக்களின் கருத்து கேட்பு இல்லாமலேயே இனி புதிய திட்டங்களையும் நடைமுறையிலுள்ள தொழில்களை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். பின்னால் அனுமதி பெற்றால் போதும் என்பதுடன், பின் நடத்தும் கருத்துக் கேட்பு கூட்டம் 30 நாட்கள் என்பது 20 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பெரு நிறுவனங்களின் பாதுகாப்புக்கான வரைவு மசோதாவே இது. வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல் துறை என எந்தவோா் அனுமதியும் இனி தேவையில்லை. சிறுதொழில்கள் நலிவடையும். காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் அரசாணையே பறிபோகும்.

எனவே, புதிய சட்ட மசோதாவை கைவிட வேண்டும். அத்துடன் 2006 சட்டத்தில் தற்போதைய இந்திய பருவ கால சூழலுக்கேற்ப, மேலும் சில கட்டுப்பாடுகள், திருத்தங்களுடன் சட்டம் நிறைவேற்ற வேண்டும். கருத்து கேட்புக் கூட்டம் ஆகஸ்ட் - 11 என்பதையும் ஒத்தி வைத்து பொது முடக்கம் முடிந்து நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.