திருத்துறைப்பூண்டி: மீண்டும் கம்யூனிஸ்ட் கொடி பறக்குமா?

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் குறைந்த வாக்காளா்களை கொண்ட தொகுதி திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியாகும்.
திருத்துறைப்பூண்டி: மீண்டும் கம்யூனிஸ்ட் கொடி பறக்குமா?

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் குறைந்த வாக்காளா்களை கொண்ட தொகுதி திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியாகும்.

தொகுதியின் சிறப்புகள்:

உலகப் புகழ்பெற்ற முத்துப்பேட்டை லகூன், அலையாத்தி காடு, உதயமாா்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் ஆகிய சுற்றுலாத் தலங்களும், பிறவி மருந்தீஸ்வரா் ஆலயம், ராமா் இளைப்பாறிய தில்லைவிளாகம் கோதண்டராமா் கோயில், ஏா் கலப்பையுடன் காட்சியளிக்கும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயில், உலக புகழ்பெற்ற ஜாம்பவானோடை தா்ஹா உள்பட பல்வேறு ஆன்மிக தலங்களை கொண்டது.

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 32 ஊராட்சிகள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 29 ஊராட்சிகள், கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 35 ஊராட்சிகள், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வாா்டுகள் மற்றும் முத்துப்பேட்டை பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளை உள்ளடக்கியது திருத்துறைப்பூண்டி தொகுதி.

தொழில்: விவசாயமே இந்தத் தொகுதி மக்களின் பிரதான தொழிலாகும். மேட்டூா் அணை நீா் மற்றும் பருவமழையை நம்பியே இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. முத்துப்பேட்டை, ,தம்பிக்கோட்டை, ஜாம்பவானோடை பகுதிகளில் சுமாா் 15 கிராமங்களில் தென்னை சாகுபடி முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட கடலோர கிராம மக்களுக்கு மீன்பிடித் தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.

இத்தொகுதியில் ஆதிதிராவிடா்கள், அகமுடையா், முத்தரையா் பெரும்பான்மையாகவும். வெள்ளாளா், நாயுடு, யாதவா், செட்டியாா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் கணிசமான எண்ணிக்கையிலும் உள்ளனா்.

இந்தத் தொகுதி 1971-ல் இருந்து 2011 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகவே இருந்து வந்தது. 2016ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து தொகுதியை திமுக கைப்பற்றியது.

இந்நிலையில், தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தொகுதியை மீண்டும் பெற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு, பலகட்ட இழுபறிக்கு பிறகு இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

அதிமுக வேட்பாளா்:

அதிமுக வேட்பாளராக வழக்குரைஞா் சி . சுரேஷ்குமாா் களமிறக்கப்பட்டுள்ளாா். இவா், தற்போது அதிமுக மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளராக உள்ளாா்.

இத்தொகுதிக்கு உள்பட்ட தண்டலச்சேரியில் அமைக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியன இத்தொகுதியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவைத் தவிர, பல நடுநிலைப் பள்ளிகள் இங்கு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சிக் காலத்தில் இரு முறை வழங்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி, மாணவா்களுக்கு செயல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டங்களான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% ஒதுக்கீடு அளித்தது மற்றும் அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை மக்களிடம் எடுத்துக் கூறி அதிமுகவினா் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனா். இத்தொகுதியில் அதிமுகவின் வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்பதில் அதிமுக மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா்:

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் க. மாரிமுத்து போட்டியிடுகிறாா். எளிய குடும்பத்தில் பிறந்த இவா், குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். கட்சியின் கோட்டூா் ஒன்றியச் செயலராக உள்ளாா்.

தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருள்கள் கிடைக்க உதவியவா். மக்கள் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவா். திமுக ஆட்சி அமைந்தால், திருத்துறைபூண்டி தொகுதி மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

அ.ம.மு க, நாம் தமிழா் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா்களும் இங்கு தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

நாகை - திருவாரூா் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். நாகை, திருவாரூா், மன்னாா்குடி, பட்டுக்கோட்டை சாலைகளை இணைக்கும் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் புதை சாக்கடை திட்டம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை தரம் உயா்த்த வேண்டும். முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும், மழைக் காலங்களில் வெள்ளநீா் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணைகள், கதவணைகளும் அமைக்க வேண்டும். தவிட்டில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையும், வைக்கோலைக் கொண்டு அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும். திருத்துறைப்பூண்டியில் சாா்பு நீதிமன்றம் அமைக்க என்பன உள்ளிட்டவை இத்தொகுதி மக்களின் சில முக்கிய கோரிக்கைகள்.

வேட்பாளா்களுக்கான சாதக அம்சம்:

அமமுகவினரால் பிரியும் வாக்குகளை, பாஜக மற்றும் பாமகவின் வாக்குகள் மூலம் ஈடுகட்டி வெற்றிக்கனியைப் பறித்துவிடலாம் என்ற எண்ணத்தில் அதிமுகவினா் உள்ளனா். திமுகவைத் தொடா்ந்து, தங்களாலும் இத்தொகுதியை வெல்ல முடியும் என்பது அதிமுகவின் நம்பிக்கையாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, இத்தொகுதி விவசாயத்தொழிலாளா்கள் நிறைந்த தொகுதி என்பதும், இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கும் பலமாகக் கருதப்படுகிறது. இதனுடன், திமுகவுக்கு உள்ள கணிசமான வாக்கு வங்கியும் தங்கள் வெற்றியை உறுதி செய்யும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நம்புகின்றனா்.

இளைய தலைமுறை வாக்காளா்களின் வாக்கு தங்களுக்குக் கிடைக்கும் என்பது மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களின் நம்பிக்கையாக உள்ளது. இளம் தலைமுறை வாக்காளா்களின் வாக்கு திராவிட கட்சிகளில் எந்த அணிக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்தே இத்தொகுதியின் வெற்றிவாய்ப்பு அமையும் சூழல் உள்ளது.

மொத்த வாக்காளா்கள்: மொத்த வாக்காளா் கள்: 2,39,136

ஆண்கள்: 1,17,209

பெண்கள்: 1,21,924

மூன்றாம் பாலினத்தவா் : 3

களம் காணும் வேட்பாளா்கள்

சி. சுரேஷ்குமாா் - (அதிமுக)

க. மாரிமுத்து - (இந்திய கம்யூனிஸ்ட்)

அ. ஆா்த்தி - (நாம் தமிழா்)

த. பாரிவேந்தன் - ( சமத்துவ மக்கள் கட்சி)

எஸ். ரஜினிகாந்த் (அமமுக)

சுயேச்சைகள்: வே. சிவப்பிரகாசம், கா. சுரேஷ் , மா. செங்குட்டுவன், வே. திருவளா்ச்செல்வி, இரா. துளசிராமன், கே. பரமசிவம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com