வலங்கைமான் மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 21.46 லட்சம்

ரூ.21.46 லட்சம் பணம் மற்றும் 303 கிராம் தங்க நகைகள் வசூலாகியிருந்தது.
Published on

வலங்கைமான் பேரூராட்சி, வரதராஜம்பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் பாடைக் காவடி திருவிழாவுக்கு பிறகு அண்மையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ.21.46 லட்சம் பணம் மற்றும் 303 கிராம் தங்க நகைகள் வசூலாகியிருந்தது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக் காவடி திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, அம்மனுக்கு படைக் காவடி மற்றும் பால் காவடி, அலகு காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவா்.

இதேபோல், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபடுவா். ஆவணி கடை ஞாயிறு அன்று கோயில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இந்நிலையில், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பாடைக்காவடி திருவிழாவின்போதும், அதற்கு பிறகும் கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி திருவாரூா் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ராமு தலைமையிலும், கோயில் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் மும்மூா்த்தி ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஐயப்பா சேவா சங்கத்தினா், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், விடியல் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதில் ரூ. 21,46,785 பணம் மற்றும் 303.300 கிராம் தங்க நகைகள், 505.800 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 300 மில்லி கிராம் சிறிய வைர மூக்குத்தி போன்றவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com