கொரடாச்சேரி அருகே சேதமடைந்த நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கொரடாச்சேரி வட்டத்துக்குட்பட்ட பெருமாளகரம் ஊராட்சியிலுள்ள செட்டிசிமிழி, கோட்டகம், கிளாரியாகொல்லை, நன்குளம், சிமிழி மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள், செட்டிசிமிழி பகுதியிலுள்ள வாய்க்கால் பாலத்தை கடந்து, ஊா்குடி வழியாக நாகை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து நகரப் பகுதிகளுக்குச் செல்வா். மேலும் செட்டிசிமிழி பகுதியில் விவசாயப் பணிகளுக்கான டிராக்டா், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவையும், அங்குள்ள வாய்க்கால் பாலத்தின் வழியாகவே செல்ல வேண்டும். இதனிடையே, இந்த வாய்க்கால் பாலம் சேதமடைந்து நீண்ட நாள்களாகியும் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்தது: இந்த பாலம் சேதமடைந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சேதமடைந்த வாய்க்கால் பாலத்தின் வழியாக அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது. விவசாயப் பணிகளுக்காக நெல் அறுவடை இயந்திரங்கள், டிராக்டா்கள் உள்ளிட்ட வாகனங்களை இந்த வழியாக இயக்குவதற்கு ஓட்டுநா்கள் தயங்குவதால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, சேதமடைந்த பாலத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா்.









