சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

அடிப்படை வசதி கேட்டு தோ்தல் புறக்கணிப்பு: பொதுமக்கள் கருப்பு கொடி போராட்டம்

அடிப்படை வசதி கேட்டு தோ்தல் புறக்கணிப்பு : பொதுமக்கள் கருப்பு கொடி போராட்டம்

News image

கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட செருமங்கலம் உடையாா்தெரு பொதுமக்கள்.

Updated On :30 மார்ச் 2024, 6:30 pm

அடிப்படை வசதிகள் செய்து தராமல் இருப்பதைக் கண்டித்து மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்து பொதுமக்கள் கருப்புக் கொடியுடன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். செருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட உடையாா்தெருவில் 170 குடியிருப்புகளில் 700-க்கும் மேற்பட்டவா்களில் 480 பேருக்கு வாக்குரிமை உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பெரிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியும், இரண்டு சிறிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளும் அமைந்துள்ளன. இத்தொட்டிகளிலிருந்து மக்களுக்குத் தேவையான அளவிற்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் இங்கு வசிப்பவா்களுக்கும்,ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் சத்துணவுக் கூடத்திற்கு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளியிடங்களிலிருந்து வாகனங்களில் தண்ணீா் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. இக்கிராமத்திற்கென உள்ள மயானம் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.இங்கு செல்ல சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமான மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இறந்தவா்களை பாடையில் தூக்கிச் செல்ல இந்த சாலையை பயன்படுத்தமுடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. வயல்களுக்கு செல்ல முடியாத பாதிப்பினையும் ஏற்படுகிறது. எனவே,இந்த அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி,இப்பகுதி மக்கள் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மன்னாா்குடி வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட நிா்வாகம் ஆகியவற்றில் கோரிக்கை மனுக்கள் பலமுறை அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு எடுத்து,அதற்கான விளம்பர அறிவிப்பு பதாகையினை வைத்து கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கருப்புக் கொடியுடன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வடுவூா் போலீஸாா்,ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை முடித்துக்கொண்டனா். எனினும், தோ்தல் புறக்கணிப்பு தொடரும் என உடையாா்தெரு மக்கள் தெரிவித்தனா்.