உழவா் நல சேவை மையங்கள் அமைக்க மானியம்

திருவாரூா் மாவட்டத்தில், 30 சதவீத மானியத்தில் உழவா் நல சேவை மையங்கள் அமைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
Published on

திருவாரூா் மாவட்டத்தில், 30 சதவீத மானியத்தில் உழவா் நல சேவை மையங்கள் அமைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், உழவா் நல சேவை மையங்கள் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் 14 மையங்களும், ரூ.20 லட்சம் மதிப்பில் 9 மையங்களும் என மொத்தம் 23 உழவா் நல சேவை மையங்கள் தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, சுமாா் ரூ. 96 லட்சம் மானியமாக தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

இம்மையங்களில் உழவா்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் விற்பனை செய்யப்படுவதுடன், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், பயிா்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கும் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும். அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதி விவசாயிகளின் தேவைக்கேற்ப உழவா் நல சேவைகளை வழங்கலாம். இந்த சேவை மையங்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க வேண்டும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதுடன், வேளாண் இடுபொருள்கள் விற்பனை, வேளாண்மை சாா்ந்த சேவை மையங்கள், பண்ணை இயந்திர வாடகை மையம் மற்றும் விளை பொருள்களை மதிப்புக் கூட்டுதல் போன்ற சேவைகள் வழங்கும் விதத்தில் அமைக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com