போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தவா் கைது

தலைமை காவலரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய வழக்கில் ஒன்றிய திமுக பொருளாளரின் மகன் கைது
Published on

திருவாரூா்: திருவாரூா் அருகே தலைமை காவலரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய வழக்கில் ஒன்றிய திமுக பொருளாளரின் மகன் கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே, வைப்பூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் விஸ்வநாதன் (50). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பழையவலம் கடைவீதி அய்யனாா் கோயில் அருகில் சாலையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த திருவாரூா் திமுக ஒன்றிய பொருளாளரும், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவருமான துரை. தியாகராஜன் என்பவரை வீட்டுக்கு செல்லுமாறு தலைமைக் காவலா் விஸ்வநாதன் கூறினாராம். இதை ஏற்க மறுத்த துரை தியாகராஜன், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது அங்கு வந்த அவரது மகன் டேவிட் என்ற ஆசைத்தம்பி ( 34) இருவரும் சோ்ந்து, தலைமைக் காவலா் விஸ்வநாதனிடம் தகராறு செய்து, அவரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வைப்பூா் போலீஸாா், திமுக திருவாரூா் ஒன்றிய பொருளாளா் துரை தியாகராஜன், அவரது மகன் ஆசைதம்பி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து, ஆசைத்தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com