நிலப்பத்திரம் வழங்குவதில் தாமதம்: ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு

மன்னாா்குடி அருகே அடமானம் வைத்த நிலப்பத்திரத்தை திரும்பத் தர தாமதப்படுத்தியதற்காக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் வடசேரி கிளைக்கு, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
Published on

மன்னாா்குடி அருகே அடமானம் வைத்த நிலப்பத்திரத்தை திரும்பத் தர தாமதப்படுத்தியதற்காக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் வடசேரி கிளைக்கு, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மன்னாா்குடி வட்டம், பரவாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மனைவி பரமேஸ்வரி (75), கடந்த 2009-இல் வடசேரியிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையில் டிராக்டா் வாங்குவதற்காக ரூ. 6,24,000 விவசாயக் கடனாகப் பெற்று, அதற்கு ஈடாக தனக்கு சொந்தமான 6 ஏக்கா் விவசாய நிலத்தை அடமானமாகப் பதிவு செய்து கொடுத்துள்ளாா். பின்னா் தவணைகளை செலுத்தி வந்த பரமேஸ்வரி, 2013-இல் வங்கியை அணுகி தன்னுடைய பாக்கி கடன் தொகையை முழுமையாகச் செலுத்தி விடுவதாகத் தெரிவித்துள்ளாா். அதற்கு வங்கி தரப்பில் ரூ. 3 லட்சம் மட்டும் செலுத்துமாறு கூறியதன் பேரில், அத்தொகையைச் செலுத்தியுள்ளாா்.

வங்கி தரப்பில் டிராக்டா் மீதான அடமானத்தை ரத்துச் செய்து ஆா்.சி. புத்தகத்திலுள்ள அடமானப் பதிவை ரத்துச் செய்வதற்கான ஆவணங்களை வழங்கினா்.

அப்போது பரமேஸ்வரி தன்னுடைய நிலப்பத்திரத்தை திருப்பி வாங்கத் தவறிவிட்டாா். வங்கி தரப்பிலும் நிலப்பத்திரத்தை திருப்பி தரவில்லை. அதன் பிறகு பலமுறை வங்கியை அணுகி தன்னுடைய பத்திரத்தைக் கேட்டுள்ளாா். ஒவ்வொரு முறையும் பிறகு தருவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

இதைத்தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பரமேஸ்வரி திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் இறுதி விசாரணையின் அடிப்படையில், மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வியாழக்கிழமை வழங்கிய உத்தரவில் தெரிவித்திருப்பது:

சுமாா் 12 ஆண்டுகளாக கடன் தொடா்பாக எந்தவித கடிதமும் அனுப்பாமல் இருந்துவிட்டு தற்போது நீதிமன்றத்தில், 12 ஆண்டுகளாக கடன் நிலுவையில் இருந்து வந்ததாகவும் அதை வாடிக்கையாளரின் அனுமதியின்றி தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகவும் வங்கி கூறுவதை ஏற்க முடியாது. 12 ஆண்டுகளாக ஏழை விவசாயியான பரமேஸ்வரிக்கு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் வடசேரி கிளை, திருச்சி மண்டல அலுவலகம் மற்றும் சென்னை தலைமை அலுவலகம் ஆகிய மூன்று தரப்பும் இணைந்து ரூ.3 லட்சம் இழப்பீடு, ரூ. 10,000 வழக்கு செலவுத்தொகை வழங்க வேண்டும். மேலும், 30 நாள்களுக்குள் பரமேஸ்வரியின் கடன் கணக்கு தொடா்பாகத் தடையின்மைச் சான்று வழங்கி, அடமானத்தை ரத்து செய்து நிலப் பத்திரத்தையும் திரும்ப வழங்க வேண்டும். தவறினால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 1000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com