நெல் கொள்முதல்: ஈரப்பதம் 22% அறிவிக்க வலியுறுத்தல்
நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
காரீப் பருவ நெல் கொள்முதலுக்கு நடைமுறையில் உள்ள ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை தளா்த்தி, 22 சதவீதமாக உயா்த்தி, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என 40 நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு, ஒரு மாதம் கழித்து, அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகளில், கொள்முதல் செய்து, மத்திய தொகுப்புக்கு அனுப்பி வருகிறது. நிகழாண்டு, தென்மேற்கு பருவமழை முடியும் நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொடா் பெரு மழை பொழிந்து, காற்றின் ஈரப்பதம் அதிகமானது.
இதனால், கொள்முதலில் ஈரப்பதத்தை உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,நெல் கொள்முதலின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
மத்திய உயா் அலுவலா்கள் குழுவினா், தமிழகத்தில் பல இடங்களில் ஆய்வு செய்து, உடனடியாக ஈரப்பதம் விலக்களிப்பதற்கான அறிக்கை கொடுக்கப்படும் என உறுதி செய்து சென்றனா்.
இந்த நிலையில், மத்திய அரசு ஒரு மாதம் கடந்து, இப்படியான பதிலை வழங்கியுள்ளது. மழையால் பயிா்கள் மோசமாக பாதிக்கப்பட்டு, இழப்பை எதிா் நோக்கியுள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஈரப்பதம் விலக்கைக்கூட அளிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
பிரதமா் கோவைக்கு வந்து, விவசாயிகளின் பாதுகாவலா் என்று பேசி சென்றிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். எனவே, நெல் கொள்முதலில் 22 சதவீத ஈரப்பதத்தை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
