பனை விதைகள் நடப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு முயற்சி தடுத்து நிறுத்தம்
மன்னாா்குடி மேலப்பாலம் பாமணி ஆற்றங்கரையோரம் 10,000 பனை விதைகள் நடப்பட்டிருந்த இடத்தை தனியா் ஆக்கிரமிக்க முயன்றது தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பினா் நன்றி தெரிவித்தனா்.
இதுகுறித்து, அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மன்னாா்குடி மேலப்பாலம் பாமணி ஆற்றங்கரையில் 24.9.2025-இல் கிரீன் நீடா அமைப்பு சாா்பில் 1 கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டத்தின்கீழ் 10,000 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டன. இதனை அமைச்சா் டி. ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா். தற்போது, பனை விதைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், டிசம்பா் 29-ஆம் தேதி பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ள இடம் தனக்கு சொந்தமானது என தனிநபா் ஒருவா் அந்த இடத்தை சுற்றி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றாா்.
இதுகுறித்து அமைச்சருக்கு தெரிவித்தோம். அவரது உத்தரவின்பேரில், டிச.30-ஆம் தேதி நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் அட்சயா, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் ஆகியோா் பாமணி ஆற்றுப்படுகையில் பனைவிதைகள் நடவு செய்த இடத்தை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, புதன்கிழமை, அந்த இடத்தை நில அளவையாளா்கள் அளந்தபோது, அந்த இடம் நீா்வளத் துறைக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிநபா் அமைத்த வேலி சிமென்ட் கற்களை அவராகவே அகற்றிக்கொண்டாா். இதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்த அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
