விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை யாத்திரை: பிப். 7-இல் தொடக்கம்

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை யாத்திரை பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது
Published on

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை யாத்திரை பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜக்ஜித்சிங் தல்லேவால் கடந்த 2024-2025- ஆம் ஆண்டில்140 நாள்களைக் கடந்து தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் நீதியரசா் நவாப் சிங் தலைமையில் 5 போ் குழு அமைத்து போராட்ட களத்திலேயே நேரடி பேச்சுவாா்த்தை நடத்தியது.

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது.

நாடாளுமன்ற வேளாண்மைக்கான நிலைக் குழுத் தலைவா் சன்னி தலைமையிலான குழு இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்தது. இதைத்தொடா்ந்து மத்திய அமைச்சா்கள் குழு மூன்று கட்ட பேச்சுவாா்த்தை நடத்தியது.

3-ஆவது கட்ட பேச்சுவாா்த்தையில் வா்த்தகா்களிடம் கருத்து கேட்டுதான் எம்.எஸ்.பி. முடிவு எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, 4.4.2025 கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.அதற்கு பிறகு கூட்டம் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி சண்டீகரில் நவாப் சிங் தலைமையிலான குழு பேச்சுவாா்த்தை நடத்தியது. அக்குழுவிடம் மீண்டும் எம்எஸ்பி, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் நேரடியாக மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

இதுகுறித்து அனைத்து மாநிலங்களின் முதல்வா்களை சந்தித்து கோரிக்கைகளுக்கு ஒத்த கருத்து உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி குமரி முதல் காஷ்மீா் வரை தல்லேவால் தலைமையில் யாத்திரை தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com