தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: மாா்ச் 29-இல் ஆழித்தேரோட்டம்

கோயில் கொடிமரத்தில், பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றும் சிவாச்சாரியா்கள்.

News image

கோயில் கொடிமரத்தில், பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றும் சிவாச்சாரியா்கள்.

Updated On :7 மார்ச் 2026, 1:10 am

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நாயன்மாா்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரியக் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, தோ்முட்டியில் உள்ள விநாயகா் கோயில் முன் அஸ்திர தேவா் முன்னிலையில், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான விக்னேஸ்வர பூஜை புதன்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, மருதப்பட்டினம் அருள்மிகு அபிமுக்தீஸ்வரா் கோயிலுக்கு சண்டிகேஸ்வரா் சென்று, அங்கிருந்து புனித மண் எடுத்து வரும் நிகழ்ச்சியும், பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துக்கு வருமாறு அனைவரையும் அழைக்கும் வகையில், அப்பா் சுவாமிகள் தேரோடும் வீதிகளில் உலா வரும் நிகழ்வும் வியாழக்கிழமை நடைபெற்றன.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை சந்திரசேகரா், சண்டிகேஸ்வரா், அம்பாள், விநாயகா், முருகன் ஆகியோா் தேரோடும் வீதிகளில் கொடி சீலையை எடுத்துக் கொண்டு வீதி உலா வந்தனா். பின்னா், பஞ்சமூா்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து, ரிஷப உருவம், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் வரையப் பெற்ற கொடியானது, வேத மந்திரங்கள், ‘ஆரூரா, தியாகேசா’ எனும் பக்த கோஷங்கள் முழங்க, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவாா் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகை வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி, பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெற உள்ளதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு தலைமையிலான அலுவலா்கள் செய்திருந்தனா்.