/

இளைய எழுத்தாளர்களே...

புது தில்லி,  ஜூலை 14:   பல்வேறு மொழிகளைத் தழுவி உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், எழுத்து ஆர்வத்தைத் தூண்டச் செய்யவும் இந்த ஆண்டு முதல் சாகித்திய அகாதெமி நிறுவனம் "யுவ புரஷ்கார்' எனும் ரூ.50 ஆய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:18 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி,  ஜூலை 14:   பல்வேறு மொழிகளைத் தழுவி உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், எழுத்து ஆர்வத்தைத் தூண்டச் செய்யவும் இந்த ஆண்டு முதல் சாகித்திய அகாதெமி நிறுவனம் "யுவ புரஷ்கார்' எனும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு அடங்கிய  விருதை அறிவித்துள்ளது.

அகாதெமியால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து 24 மொழிகளிலும், 35 வயதுக்குள்பட்ட இந்திய இளம் எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை இந்த விருதுக்காக அனுப்பலாம்.

தாங்கள் சார்ந்துள்ள மொழியின் இலக்கிய, மொழி வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்புச் செய்யும் வகையில் அவர்களது நூல் இருக்க வேண்டும். மேலும், படைப்பாகவோ, விமர்சனப் பணியாகவோ இருக்கலாம்.

ஆனால், மொழிபெயர்ப்பாகவோ, தொகுப்பாகவோ, விரிவுரையாகவோ, சுருக்கப்பட்டதாகவோ, பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கான அல்லது எந்தவொரு தேர்வுக்கான ஆய்வுப் பணிக்குத் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கக் கூடாது. அல்லது ஏற்கெனவே சாகித்திய அகாதெமியிடமிருந்து விருதுபெற்ற எழுத்தாளர் மேற்கொண்ட பணியாகவோ இருக்கக் கூடாது.

அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கக் கூடாது. விருது அறிவிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி 1-ம் தேதியின்படி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் தங்களது விருப்பம்போல் எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். அனுப்பப்பட்ட புத்தகங்கள் நூலாசிரியருக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது. அது தொடர்பான கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ளப்பட மாட்டாது. படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை 31-ம் தேதியாகும்.

இதுகுறித்து சாகித்திய அகாதெமியின் துணைச் செயலர் (நிர்வாகம்) கே.ஸ்ரீனிவாச ராவ் கூறியது:

""இளைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டு முதல் "யுவ புரஷ்கார்' விருது வழங்கப்பட உள்ளது. 35 வயது நிரம்பிய இளைய எழுத்தாளர்கள் இதுவரை தாங்கள் படைத்த படைப்புகளில் சிறந்தவற்றை அனுப்பலாம். ஆலோசனைக் குழு மூலம் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றிதழ், பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக வருகைப் பேராசிரியர்கள் ஆகியோருக்கு "ரைட்டர் இன் ரெஸிடென்ஸி' எனும் பெயரில் மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் என்ற அளவில் 6 மாதங்களுக்கு உதவித் தொகையை 3 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். இதுவரை 125 பேருக்கு இதுபோன்ற உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்மொழியைப் பொருத்தமட்டில் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், டாக்டர் எஸ்.வி.சுப்பிரமணியன், சா.கந்தசாமி, தோப்பில் முகம்மது மீரான், பொன்னீலன், பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன் ஆகியோர் பெற்றுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 3-வது வாரம் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. அடுத்தாண்டு இந்த விழாவை பிப்ரவரி 13 முதல் 18-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஆகஸ்ட் மாதத்தில் மொழிபெயர்ப்புக்கான விருது வழங்கப்படும். முன்பு தில்லியில் விழா நடத்தி விருது வழங்கப்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக போபால், பெங்களூர், ஹைதராபாத், கோவா, கொல்கத்தா போன்ற பிற நகரங்களிலும் இவ்விழா நடத்தப்பட்டது. இந்தாண்டுக்கான விழா திருவனந்தபுரத்தில் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

சிறந்த குழந்தைகள் இலக்கியப் படைப்புகளுக்கான "பால் சாகித்திய புரஷ்கார்' விருது ஜவாஹர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருது கொல்கத்தாவில் நவம்பர் 14-ல் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 350 இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள், கூட்டங்கள், விவாத நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

எழுத்தாளர்கள் பிற எழுத்தாளர்கள் குறித்து பேசும் கருத்துக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் சாகித்திய அகாதெமி பதிப்பகம் மூலம் 400 புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு எங்களுக்கு கிடைத்த புத்தகப் பதிப்பு ஆர்டர்களில் தமிழக அரசிடமிருந்து மட்டும் ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக ஆர்டர் கிடைத்தது. 47 தலைப்புகளில் புத்தகங்களை அச்சிட்டு வழங்கினோம். இந்த ஆண்டு ரூ.85 லட்சத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் எங்கள் பதிப்பகம் மூலம் ரூ.7 முதல் ரூ.8 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பாரீஸ், மாஸ்கோ, லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு மாநகரங்களிலும் புத்தகக் கண்காட்சிகளில் அரங்குகள் அமைக்கிறோம். வரும் நவம்பரில் ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளோம்.தில்லி தலைமையகத்தில் உள்ள நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. இதேபோன்று, கொல்கத்தா, மும்பையிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் கலாசாரத் துறையின் மூலம் சாகித்திய அகாதெமிக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.16 கோடி அளவுக்கு மானியம் அளிக்கப்படுகிறது'' என்றார் அவர்.

புது தில்லியின் பெரோஷா சாலையில் கம்பீரமாக எழுந்து நிற்கும் "ரவீந்திர பவன்' என்ற பெயரைத் தாங்கி நிற்கும் மூன்றுமாடிக் கட்டடத்தில் இயங்கி வருகிறது இந் நிறுவனம்.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோரால் தொடங்கப்பட்டது இது.

1954 மார்ச் 12-ல் இந்த அகாதெமி மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டாலும் இது ஒரு தன்னாட்சி அமைப்பாக, இலக்கியப் பணிகளுக்கான வளர்ச்சி மற்றும் வெளியீடு செய்யும் மத்திய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், காஷ்மீரி, மைதிலி, நேபாளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, சம்ஸ்கிருதம், சந்தாலி, உருது உள்பட 24 மொழிகளில் இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

சாகித்திய அகாதெமியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரவீந்திர பவன் கட்டடத்திலேயே சங்கீத நாடக அகாதெமி, லலித் கலா அகாதெமி ஆகியவையும் தனித் தனி அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

2004-ம் ஆண்டின்போது இந்நிறுவனம் தனது பொன்விழாவைக் கொண்டாடியது. இதன் செயல்பாடுகள் குறித்து சாகித்திய அகாதெமி துணைச் செயலரும் (பதிப்பு), இலக்கிய நிகழ்ச்சித் தலைவருமான ஜா. பொன்னுதுரை கூறியதாவது:

""நாட்டில் ஒவ்வொரு மொழியிலும் உள்ள இலக்கியச் செறிவை சாகித்திய அகாதெமி அங்கீகரிக்கிறது. மைதிலி, சந்தாலி, ராஜஸ்தானி போன்ற மொழிகளில் உள்ள பல்வேறு இலக்கிய விஷயங்களை வெளிபடுத்த, சாகித்திய அகாதெமி பல பணிகளைச் செய்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு மொழிகளின் வேர்களை ஆராய்வதற்கான பணியை சாகித்திய அகாதெமி  மேற்கொண்டது. தொடர்ந்து மேற்கொண்டும் வருகிறது. அதற்காகத்தான் சிறந்த இலக்கியப் படைப்புகளைப் பாராட்டி பரிசு வழங்குகிறது.

அதேபோன்று,  இலக்கிய வளர்ச்சிக்கும் ஒரு மொழியின் இலக்கியம் மற்றொரு மொழியின் இலக்கியத்தையும், ஓர் எழுத்தாளன் பிறமொழி எழுத்தாளனைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கவும், கலாசார ஒற்றுமைக்கும் மொழிபெயர்ப்பு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது.

வங்காள இலக்கியங்கள் காஷ்மீரி மொழிக்கும், தெலுங்கு, தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியங்கள் ராஜஸ்தானி, மைதிலி, சந்தாலி போன்ற பழங்குடி மொழிக்கும்கூட சென்றடைய முடிகிறது என்றால் அதற்கு மொழிபெயர்ப்பின் உதவியே காரணம்.

அதனால், சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதை 1989-ம் ஆண்டு முதல் வழங்கி ஊக்குவித்து வருகிறது. அதன்படி, 24 மொழிகளில் உள்ள சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, சாகித்திய அகாதெமியின் புத்தகப் பதிப்பில் 70 முதல் 80 சதவீதம் வரை மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஆகும். 20 சதவீதம் முதல் முறையாகப் பதிப்புக்கு வரும் நூல்களாக உள்ளன.

இந்திய இலக்கியச் சிற்பிகளின் வரிசை என்ற பெயரில் முன்னணி எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை 120 பக்கங்கள் கொண்ட புத்தகமாகவும் அகாதெமி வெளியிடுகிறது.

இதுதவிர, 24 மொழிகளைத் தவிர்த்து சௌராஷ்டிரா போன்ற முறைசாராமல் அதேவேளை இந்திய மொழியாக உள்ள மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் சிறந்த எழுத்தாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் "பாஷா சம்மான்' விருது 1996-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இலக்கிய நூல்களை பல மொழிகளிலும் மொழி பெயர்க்கும் திட்டமும் உண்டு என்றார்.

சாகித்திய அகாதெமியின் தலைவராக சுநீல் கங்கோபாத்யாய், துணைத் தலைவராக டாக்டர் சுதீந்தர் சிங் நூர், செயலராக அக்ரஹார கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

மேலும் விவரங்கள் அறிய சாகித்திய அகாதெமியின் ஜ்ஜ்ஜ்.ள்ஹட்ண்ற்ஹ்ஹஹந்ஹக்ங்ம்ண்.ஞ்ர்ஸ்.ண்ய்  எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

1.50 லட்சம் நூல்கள்

கித்திய அகாதெமி நிறுவனக் கட்டடத் தரைத் தளத்தில் 1.50 லட்சம் நூல்கள் கொண்ட "மெகா' நூலகம் இயங்கி வருகிறது.

நூலகத்தின் உள்பகுதி வாசிப்பு அறையில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மாதாந்திர, வாராந்திர சஞ்சிகைகள், இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் படிப்பதற்கு வசதியாக போதிய வகையில் இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டுள்ளன.

மொழிகள் வாரியாக... அந்தந்த மொழிகளுக்கான பிரத்யேக ரேக்குகளில் இலக்கிய, கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் ஆகியவை வரிசையாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு தனியாக அலமாரிகள் உள்ளன. தேவைப்படும் புத்தகங்களின் பக்கங்களை நகல் எடுப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நூலக உறுப்பினர்கள் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவும், ஏனையோர் நூலக வாசிப்பு அறையில் இருந்து படிப்பதற்கும் தகுந்த வசதியுள்ளது. உறுப்பினர் கட்டணமாக நூல்களின் தேவையைப் பொருத்து ரூபாய் ஆயிரமோ, ஐநூறோ வசூலிக்கப்படுகிறது. தவிர, ஆண்டுக் கட்டணமாக ரூ.50 பெறப்படுகிறது. நூலகம் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது.

தமிழ் நூல்கள்... நூலகத்தில் உள்ள தமிழ்மொழிப் பிரிவில் சங்ககாலம் தொடங்கி அண்மைக் காலம் வரையிலான பலவித இலக்கிய நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.

சாண்டில்யன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா என தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ப் புத்தகங்கள் மட்டும் சுமார் 15,000 எண்ணிக்கையில் 5 அடுக்குகளில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இலக்கியம், கதை, கட்டுரை, கவிதை, சமூக அறிவியல், பெண்ணியம், கல்வி, மொழியியல், நாட்டுப்புறக் கலைகள், இசை, நாடகம், வைணவம், வேதங்கள் ஆகிய தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

1956-ம் ஆண்டு வெளிவந்த உ.வே.சாமிநாத ஐயரின் தமிழ்ப் பேரகராதி, பி.டி. ஸ்ரீனிவாச ஐயர் எழுதி 1929-ம் ஆண்டு வெளிவந்த "தமிழ் வரலாறு' போன்ற அரிதான நூல்களும் உள்ளன. பல்வேறு மொழிகளின் வரலாறு தொடர்பான புத்தகங்களும், பண்டைக்கால இந்தியா, தென் இந்தியா வரலாறு தொடர்பான நூல்களும் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட நூல்களும் தனி அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல்களும் தனியாக வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.

நூலகத்தின் தலைமை நூலகர் சுஃபியான் அகமது கூறியது:

இப்போது, துவாரகாவில் உள்ள இடத்தில் நான்கு தளங்களுடன் கூடிய புதிய நூலகக் கட்டடம் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. நூலகத்தில் பயன்படுத்தப்பட்ட நூல்கள் புதிய நூலகக் கட்டடத்திற்கு எடுத்துச் சென்று வைக்கப்பட உள்ளது.

இப்புதிய நூலகக் கட்டடப் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்போது நூலகத்தில் இரு உதவி நூலகர்கள், 6 நூலக உதவியாளர்கள் உள்பட 25 பேர் பணியாற்றுகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.