ஆன்மிகத்துடன் கலையும் வளர்க்கும் அமைப்பு!
புது தில்லி, ஜூலை 20: இளம் தலைமுறையினரிடையே பக்தியுடன் கூடவே, தென்னிந்திய பாரம்பரிய இசைக் கலைகளையும் வளர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது வட-மேற்கு தில்லி கலாசாரக் கூட்டமைப்பு. தில்லியின் கரோல் பாக்,


புது தில்லி, ஜூலை 20: இளம் தலைமுறையினரிடையே பக்தியுடன் கூடவே, தென்னிந்திய பாரம்பரிய இசைக் கலைகளையும் வளர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது வட-மேற்கு தில்லி கலாசாரக் கூட்டமைப்பு.
தில்லியின் கரோல் பாக், முனிர்கா, ஆர்.கே.புரம் உள்ளிட்ட பகுதிகள் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள தமிழர்களில் சிலர், 1993-ம் ஆண்டின் போது வட-மேற்கு தில்லியில் உள்ள ரோஹிணி செக்டர் 2, 3 ஆகிய பகுதிகளில் குடியேறினர்.
அப்போது, ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தவும், சமூகப் பணிகளை மேற்கொள்ளவும் அங்குள்ள தமிழர்கள் சிலர் கரம்கோத்து ஒரு சங்கத்தை ஆரம்பித்தனர்.
வி.நாகராஜன், எஸ்.எஸ்.ராஜன், ஏ.ராமகிருஷ்ணன், எஸ்.பத்மநாபன் ஆகியோர் சேர்ந்து வட-மேற்கு தில்லி கலாசாரக் கூட்டமைப்பு என்ற பெயரில் இவ்வமைப்புக்குப் பிள்ளையார் சுழி போட்டனர். அதன்பிறகு தமிழர்கள் மட்டுமின்றி, பிற தென்னிந்திய மாநில மக்களும், வட இந்தியரும் ஒன்றிணையும் வகையில் சங்கச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
சங்கத்தின் நிர்வாகிகளாக சீதாராமன், அய்யப்பன், என்.கணேசன் ஆகியோர் பொறுப்பேற்றுப் பணியாற்றத் தொடங்கினர்.
1995-ம் ஆண்டு வாக்கில், விநாயகர் சதுர்த்தி பூஜை, விளக்குப் பூஜை, ஐயப்பன் பூஜை ஆகியவற்றை நடத்தத் தொடங்கினர்.
வட- மேற்கு தில்லியில் முதல்முறையாக விநாயகர் சிலை ஊர்வலத்தை இவ்வமைப்பினர் நடத்தியபோது, எஸ்.பி. கோயல் ஊர்வலத்திற்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உதவியதாக இதன் நிர்வாகிகள் எஸ்.நடராஜன், எஸ்.முரளி ஆகியோர் நினைவுகூர்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாகக் கொண்டாடும் இச்சங்கத்தினர் முதல் நாளில் பூஜைகளையும், இரண்டாம் நாளில் சங்கீத கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
இவ்வமைப்பின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் ஆர்.அய்யப்பன் கூறியது: ""வளர் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2003-ம் ஆண்டு முதல் சங்கீத இசைக் கச்சேரி நடத்தி மேடை வாய்ப்பு அளித்து வருகிறோம். இதற்கு சபாக்கள், கோயில்கள் சில ஊக்கம் அளித்து உதவி வருகின்றன.
2006-ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி கவிதை, பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தி குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புத் தருகிறோம். படிப்பிலும், விளையாட்டிலும், சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டுகிறோம்.
கடந்த 18 ஆண்டுகளாக ஸ்ரீ ஐயப்ப மண்டல பூஜையை நடத்தி வருகிறோம். டிசம்பர் மாதத்தில் 2 நாள்கள் இவ்விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. பூஜையின் முதல் நாளில் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளும், 2-ம் நாளில் ஸ்ரீ ஐயப்ப பூஜையுடன் அன்னதானமும் நடைபெறுகிறது.
பக்தி இசைப் பாடகர் வீரமணி ராஜு, 3 ஆண்டுகள் ஸ்ரீ ஐயப்ப பூஜையில் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அதேபோன்று, திருச்சி சபரிதாஸன், மதுரை ராமச்சந்திரன், மஞ்சப்பர மோகன் ஆகியோரும் பக்தி இசை வழங்கியுள்ளனர்.
ஆன்மிகத்துடன் கலாசாரத்தை ஒருங்கிணைப்பதும், வளரும் குழந்தைகளின் இசைத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதும் எங்கள் கூட்டமைப்பின் குறிக்கோளாகும்.
மூத்த கலைஞர்கள் தில்லியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இடம்மாறிச் செல்ல நேரிடும்போது பாராட்டி பிரிவு உபசார விழா நடத்துகிறோம்.
எங்கள் பகுதியில் துக்க நிகழ்ச்சிகள் குறித்து தகவல் தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்களின் இல்லங்களுக்குச் சென்று உடலுதவியும், இயன்ற பொருளுதவியும் சங்க உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டுதல் அவசியமாகிறது. ஆகவே, பரதநாட்டியம் உள்ளிட்ட இசை, கலைப் பயிற்சி வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அதேபோன்று, கல்யாண மாலை நிகழ்ச்சி நடத்தவும் உள்ளோம். சங்கத்திற்கான இடத்தை பெறும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
மேலும், மாதம் ஒரு கலை நிகழ்ச்சியை நிரந்தமாக நடத்தவும் உள்ளோம். இதன் மூலம் தென்னிந்திய இசைக் கலையைக் குழந்தைகளிடம் பரப்பத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவி கிடைத்தால் ஊக்கமாக இருக்கும். இசை, கலை நிகழ்ச்சிகளை நடத்தி குழந்தைகளை ஊக்குவிப்பதற்கு ஆஸ்திக சமாஜம், காயத்ரி பைன் ஆர்ட்ஸ், தாளபக்தி, ரசிகப்பிரியா, தில்லி முத்தமிழ்ப் பேரவை, தில்லித் தமிழ்ச் சங்கம், கலா தர்ப்பணம் ஆகிய அமைப்புகள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளன'' என்றார்.
கூட்டமைப்பின் பொதுச் செயலராக எஸ்.நடராஜன், இணைச் செயலராக எஸ்.முரளி, பொருளாளராக எம்.மோகன், மூத்த ஆலோசகராக கே.பி.சுப்பிரமணியம் ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...