/

அடிப்படை வசதிகளில் குறைபாடு: இந்தர்புரி மக்கள் அவதி!

புது தில்லி, ஜூன் 13: புதுதில்லி இந்தர்புரி பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியன காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.  தில்லி மாநகராட்சியின் 151-வது வார

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:37 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, ஜூன் 13: புதுதில்லி இந்தர்புரி பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியன காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.

 தில்லி மாநகராட்சியின் 151-வது வார்டுக்கு உள்பட்ட இந்தர்புரி பகுதியில் 7 ஆயிரம் தமிழர்கள் உள்பட சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

சாக்கடை பிரச்னை: சில ஆண்டுகளாக சுகாதார, குடிநீர் வசதியில் தொய்வு ஏற்பட்டு வருவதாக இப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வார்டில் உள்ள பல தெருக்களின் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கிறது.

கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. இதனால், தொற்றுநோய் பரவி விடுமோ என்று இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குடிநீர்ப் பற்றாக்குறை: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநகராட்சி மூலம் இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய்களில் காலையிலும், மாலையிலும் சுமார் 3 மணி நேரம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இப்போது, காலையில் மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுவதாகவும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறை: இந்தர்புரியில் உள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் வகுப்பறைச் சூழல் நன்றாக இருந்தபோதிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. வெறும் 3 ஆசிரியைகள் மட்டுமே பணியில் உள்ளதாகவும், இதனால் கற்பித்தலில் சுமை ஏற்படுவதாகவும் புத் நகரைச் சேர்ந்த பெண் தெரிவித்தார்.

 இது பற்றியெல்லாம் இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்லியும் "செவிடன் காதில் ஊதிய சங்கு' போல உள்ளதாக அலுத்துக்கொள்கின்றனர் இப்பகுதி மக்கள்.

 ராஜேந்தர் நகர் தொகுதிக்குள் இந்த வார்டு பகுதி வருகிறது. இத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரமாகந்த கோஸ்வாமியிடம் இங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்த பிரச்னைகளை எடுத்துக்கூறியும் உரிய நடவடிக்கை இல்லையாம்.

  இந்த வார்டு பகுதி உள்ளடங்கும் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. அஜய் மக்கன், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் வார்டை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

 இதுகுறித்து 151 வார்டு பகுதி காங்கிரஸ் பிரமுகர் ரவி நாயக்கர் கூறுகையில், குடிநீர், சுகாதாரப் பிரச்னைகளால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எம்.எல்.ஏ., எம்.பி.களிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. எனவே, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.