/

தமிழ்வழிப் பள்ளிகளில் தட்டுப்பாடின்றி கிடைக்குமா பாடநூல்?

புது தில்லி, ஜூன் 17: புதுதில்லியில் தமிழ்வழிக் கல்வி கற்பிக்கப்படும் மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டிலாவது தமிழ்வழிப் பாடநூல்கள் போதிய அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆசி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:41 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, ஜூன் 17: புதுதில்லியில் தமிழ்வழிக் கல்வி கற்பிக்கப்படும் மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டிலாவது தமிழ்வழிப் பாடநூல்கள் போதிய அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர், பெற்றோர் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 புதுதில்லி இந்தர்புரி, திரிலோக்புரி, கல்யாண்புரி, ஜக்கூர்பூர், மங்கோல்புரி, ஆஸ்ரமம், வசீர்பூர் ஆகிய 7 இடங்களில் தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் தமிழ்வழிக் கல்வி போதிக்கும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

 தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளைச் சுற்றி இப் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் அதிக அளவில் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 பெற்றோர்களின் ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகமும், தமிழ்வழிப் பாடநூல்கள் உரிய நேரத்தில், போதிய அளவில் மாணவர்களுக்குப் கிடைக்காமல் போவதும் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 ""தமிழ்வழிப் பாடநூல்கள் தமிழகத்தில் இருந்து பெறப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளாகவே தமிழ்வழிப் பாடநூல்கள் மாணவர்களுக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை.

 பாடநூல்கள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க தில்லி மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசை அணுகி பாடநூல்களை விரைந்து பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழ்வழி மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

 ""சென்ற ஆண்டில் தமிழ்ப் பாடநூல் கிடைக்காதபோது தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் இருந்து பெற்று மாணவர்களுக்கு வழங்கிவிட்டோம். இருப்பினும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் போனதால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

 இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பாடநூல்களை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் வாங்கி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை மாணவர்கள் நோட்டில் எழுதிப் படிக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட பாடத்திற்குரிய புத்தகம் இன்றி, பாடங்களை எழுதிப் படிப்பது சுமை தருகிறது. இப்பிரச்னைகூட மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு ஏன் காரணமாக இருக்கக் கூடாது?'' என்றார்.

 சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு தமிழ்வழி ஆரம்பப் பள்ளியிலும் 200 முதல் 250 மாணவர்கள் வரை பயின்று வந்தனர். இப்போது 7 பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 1,000 மாணவ, மாணவியர் மட்டுமே பயில்வதாக ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.

 ""மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வி உதவி என பலவற்றிலும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான வசதிகளை செய்து தருகிறது.

 ஹிந்தி அதிகம் பேசுவோர் வாழும் தில்லியில் தமிழ், உருது ஆகிய இரு மொழிகளுக்கு மட்டுமே பயிற்றுமொழியில் பள்ளி நடத்துவதற்கு தில்லி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

 இதுபோன்ற சூழலில், மாணவர்கள் பயில்வதற்கு ஏற்ப தேவையான தமிழ்வழிப் பாடநூல்களையும் முன்கூட்டியே தமிழகத்தில் இருந்து பெற்று வழங்கினால் நன்றாக இருக்கும். பாடநூல்கள் தங்குதடையின்றி வழங்குவதற்கு தமிழக அரசு உதவி செய்தால் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும்'' என்றார் மற்றொரு ஆசிரியர்.

 தமிழ்வழி மாநகாராட்சிப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் கற்கும் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை வேறு பள்ளியில் தொடங்கும்போது தமிழ்ப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ படிக்க வேண்டிய சூழல் உள்ளது.

 இதுவும், தமிழ்வழிக் கல்வி தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் பெற்றோர்களிடையே ஆர்வம் குறையக் காரணம் ஆகிவிட்டது. 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் மாணவர்கள் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்று தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறினார்.

 தமிழக முதல்வருக்கு  வேண்டுகோள்

 ""மும்பை போன்ற இடங்களில் இயங்கும் தமிழ்வழிக் கல்வி பள்ளிகளுக்கு பாடநூல்களை வழங்க தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 ஜூலை 1-ம் தேதி தில்லியில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தில்லி மாநகராட்சி தமிழ்வழி தொடக்கப் பள்ளிகளில் அனைத்துப் பாடநூல்களையும் இலவசமாக வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலிலதா நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தில்லிவாழ் தமிழர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.