/

இங்கிலாந்துக்கு சைக்கிள் பயணம்: தமிழரின் லட்சியம் நிறைவேறுமா?

புது தில்லி, ஜூன் 23: கன்னியாகுமரியில் இருந்து இங்கிலாந்து நோக்கி சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ள சென்னையைச் சேர்ந்த லாங்மார்ச் கஜேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உதவிக்காக தில்லியில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:47 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, ஜூன் 23: கன்னியாகுமரியில் இருந்து இங்கிலாந்து நோக்கி சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ள சென்னையைச் சேர்ந்த லாங்மார்ச் கஜேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உதவிக்காக தில்லியில் காத்திருக்கிறார். தனது லட்சியக் கனவை அமைச்சர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறுகிறார் அவர்.

முதிர்ந்த தோற்றம், மெலிந்த தேகம், பளபளப்பற்ற உடை, சாதாரண சைக்கிள், ஒரு சிறிய துணிப்பை, கால்களில் "ஸ்லிப்பர்' செருப்பு என காணப்படும் இவர், உறுதியான நம்பிக்கையுடன் தலைநகரில் சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

போக்குவரத்து நிறைந்த தில்லியின் நகர்ப் பகுதியில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு ஈடுகொடுத்து மிடுக்குடன் வண்டியைச் செலுத்துகிறார் இந்த 60 வயது இளைஞர்.

பிரிட்டிஷ் இரண்டாம் எலிசபெத் ராணியைச் சந்திக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார் கஜேந்திரன்.

சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களைக் கடந்து தில்லிக்கு வந்திருக்கும் அவர், பாகிஸ்தான் வழியாகச் செல்வதற்கு விசா, இதர வசதிகள் தேவை என்பதால் ப.சிதம்பரத்தின் உதவிக்காக தில்லியில் தங்கியிருக்கிறார்.

தில்லி பி.டி. பண்டிட் மார்க் பகுதியில் நண்பர் ரோடாஷ் சர்மா என்பவரது கடையில் கண்களில் நம்பிக்கையுடனும், மனதில் உறுதியுடனும் கடந்த இரு வாரங்களாக காத்திருக்கிறார் இவர்.

""எனது சொந்த ஊர் சென்னையைச் சேர்ந்த ஆவடி. எலிசபெத் மகாராணியை சந்திப்பதற்காக இங்கிலாந்து செல்லும் சைக்கிள் பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து 15.8.2010-ல் தொடங்கினேன்.

சென்னை, மும்பை, போபால், கொல்கத்தா சென்று தற்போது புதுதில்லி வந்தடைந்துள்ளேன். எனது பயணத்தின்போது அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரையும் சந்தித்துள்ளேன். 10 ஆயிரம் கி.மீ. தூரம் வரை பயணித்திருக்கிறேன்.

தலைநகரில் இருந்து பஞ்சாப் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான், ஈரான், இராக், துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வழியாக லண்டன் வரை தரை மார்க்கமாக சைக்கிளில் செல்லத் திட்டமிட்டுள்ளேன்.

இதற்குத் தேவையான பாஸ்போர்ட்- விசா உள்பட அனைத்துவித அனுமதிகளையும் வழங்கி வாழ்த்தி வழியனுப்புமாறு ப.சிதம்பரத்திற்கு துரித அஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். அதனால் அவரை நேரில் சந்திக்கவில்லை. எனினும், இந்தப் பயணத்திற்கு அவர் உதவிடுவார் என்று நம்புகிறேன்.

இந்தக் கடினமான பயணத்திற்கு உடல் ஒத்துழைக்குமா? சாத்தியமாகுமா? என்று கேட்டதற்கு "நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். மனதில் உறுதியும், உடலில் தெம்பும் உள்ளது. அதனால் வரும் 2012-ம் ஆண்டு மே மாதத்திற்குள் லண்டன் சென்று பிரிட்டிஷ் பிரதமரையும் மகாராணியையும் சந்திப்பேன்.

மேலும், என்னுடைய சைக்கிள் பயணத்திற்கான காரணத்தை மகாராணியிடம் தெரிவித்து, "மாறுதல் தேவை' எனும் நான் எழுதிய நூலை அவர் வெளியிடுமாறு கேட்டுக்கொள்வேன்.

இந்தியாவைப் பற்றியும், கல்வி முறை பற்றியும், நாட்டில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் பற்றியும் இந்தப் புத்தகத்தில் நான் தெளிவாக எழுதியுள்ளேன். இதன் பிரதி ஒன்றை குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமிடம் 28.6.2007-ல் நேரில் சந்தித்து அளித்தேன். அவரிடம் அப்போது பேசும் வாய்ப்பும் கிடைத்தது. தேசிய நதிநீர் இணைப்புக் குறித்து அவரிடம் நான் கூறிய கருத்துகளை மிகவும் ஆர்வத்துடன் கேட்டார்.

270 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் பலன் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளில் நான் பற்றுக்கொண்டவன். இன்றைக்கு நமது தேசத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவர் போன்ற தலைவர்கள்தான் அவசியத் தேவையாக இருக்கிறார்கள் என்கிறார் கஜேந்திரன்.

இவர் ஏற்கெனவே 1990-களில் சென்னை முதல் தில்லிக்கு நடைப்பயணம் சென்றுள்ளார். அதேபோன்று, நதிகளை இணைக்கக் கோரி 2005-ம் ஆண்டு நாடு முழுவதும் சைக்கிள் பயணம் செய்துள்ளார். இவரது தற்போதைய இங்கிலாந்து பயணக் கனவு நிறைவேற அனுமதி கிடைக்குமா? மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு உதவிக்கரம் நீட்டுவார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் கஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.