தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களான மறைந்த காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர். ஆகிய மூவரும் ஏழ்மையில் பிறந்து ஏழையாகவே வாழ்ந்து மறைந்து எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்து வருபவர்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சு. திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டினார்.
தில்லி தமிழ் சங்கத்தில் காமராஜரின் 114-ஆவது பிறந்த நாளையொட்டி காமராஜர் மற்றும் கக்கன், எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சு. திருநாவுக்கரசர் பேசியதாவது:
காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர். ஆகிய மூன்று தலைவர்களும் மக்களுக்காக வாழ்ந்து, மக்களைப் பற்றியே சிந்தித்து பொது வாழ்வில் இருந்தவர்கள். இந்த மூன்று தலைவர்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. மூவரும் வெவ்வேறு இயக்கங்களில் இருந்த போதிலும் அவர்களின் ஆரம்பம் காங்கிரஸ்தான்.
காமராஜரை தனது வழிகாட்டி என போற்றியவர் எம்.ஜி.ஆர். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை "சத்துணவுத் திட்டம்' என தனது ஆட்சியின் போது மாற்றி, அத்திட்டத்துக்கு மெருகேற்றியவர் எம்.ஜி.ஆர். இந்த மூன்று தலைவர்களும், ஏழ்மையில் பிறந்து, ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர்கள். எம்.ஜி.ஆர். கூட தனக்குப் பிறகு எந்த சொத்துகளையும் வைத்துக் கொள்ளாமல் ஊருக்காகவே வாழ்ந்து மறைந்தார். எம்.ஜி.ஆர். நல்ல உடைகளை அணிந்தாரே தவிர, அதில் ஆடம்பரம் காணப்படவில்லை. தான் வாழ்ந்த ராமவரம் வீட்டையும், தி.நகர் வீட்டையும் மக்களுக்காகவே எழுதி வைத்தார்.
அதுபோலவே காமராஜர், கிராமங்கள் தோறும் அரசுப் பள்ளிகளை நிறுவினார். தமிழகத்தில் கல்லணைக்குப் பிறகு அனைத்து அணைகளையும் கட்டியது, தமிழகத்தில் ஏராளமான தொழிற்பேட்டைகளை உருவாக்கியது ஆகியவற்றுக்கு காமராஜரே காரணம். காமராஜர் காலத்தில் மின் பற்றாக்குறை இருந்ததில்லை. எதிர்காலத்தை அனுமானித்து அதற்குத் தக்கவாறு மின் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுத்தார்.
சிறியவர்களைக்கூட மதிக்க வேண்டும் என்ற பெரியாரிடம் இருந்த பண்பு காமராஜரிடமும் இருந்தது. கக்கன் மீது மரியாதை கொண்டு அவருக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை அளித்தவர் காமராஜர். பதவிகள் மனிதர்களை மாற்றிவிடும் சூழலில் காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர். ஆகியோர் எளிமையின் இலக்கணமாக வாழ்நாள் இறுதி வரை திகழ்ந்தனர் என்றார் திருநாவுக்கரசர்.
நிகழ்வில் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எச். வசந்தகுமார் பேசுகையில், "லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய இரு பிரதமர்களை உருவாக்கியவர் காமராஜர். அவர் இறந்த போது ரொக்கம் ரூ.136, இரு ஜோடி செருப்புகள், நான்கு ஜோடி வேஷ்டி, சட்டைகள் ஆகியவை மட்டுமே அவரது வீட்டில் இருந்தன. நாட்டின் கடைக்கோடியில் உள்ள தமிழர்கள் வெளிநாட்டில் சென்று பயிலவும், வாழ்வில் முன்னேறவும் காரணமாகத் திகழ்ந்தவர் காமராஜர்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்க துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், பொதுச் செயலாளர் என். கண்ணன், தில்லி முத்தமிழ்ப் பேரவைப் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், துணைத் தலைவர் ராகவன் நாயுடு, தெற்கு தில்லி மாநகராட்சி கவுன்சிலர் எம். நாகராஜன், கக்கனின் மகன் பி.கே. பாக்கியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தில்லி தமிழ் சங்க இணைப் பொருளாளர் பி. குருமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஹரிகரன் ஆகியோர் வாழ்த்த்துரை வழங்கினர்.
முன்னதாக நிகழ்ச்சியையொட்டி, தமிழகத்தில் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், வில்லுப்பாட்டு ஆகியவை தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









