"முறைதவறிய உறவு தொடர்பான இந்திய தண்டனையியல் சட்ட (ஐ.பி.சி.) பிரிவு, அனைவரும் சமமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது; இது திருமணமான ஆண், பெண் இடையே வேறுபாட்டை காட்டுகிறது'' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், "இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497ஆவது பிரிவானது, திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் முறைதவறிய உறவில் ஈடுபடும் திருமணமான ஆடவரை தண்டிக்கும் வகையில் மட்டுமே உள்ளது; திருமணமான பெண்ணுக்கு அதில் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படவில்லை. ஆதலால் அந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களில் ஒருவரான இத்தாலியில் வசிக்கும் ஜோசப் சைன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கலீஸ்வரராம் ராஜ் வாதிடுகையில், "ஐ.பி.சி. 497ஆவது பிரிவில் திருமணமாகாத ஆண், திருமணமாகாத பெண்ணுக்கு இடையே இருக்கும் முறைதவறிய உறவு குறித்து தெரிவிக்கப்படவில்லை. முறை தவறிய உறவில் ஈடுபடும் திருமணமான ஆண்களை தண்டிக்கும் வகையிலேயே உள்ளது. ஆனால் திருமணமான பெண்ணை தண்டிப்பதில்லை' என்றார். அத்துடன், அந்த சட்டப்பிரிவில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:
ஐ.பி.சி. 497 பிரிவானது, வெளிப்படையாக ஏதேச்சதிகாரம் கொண்டதாக திகழ்கிறது. இந்தப் பிரிவில், திருமணமான ஆணுடன் அல்லது வேறொரு ஆணுடன் முறைதவறிய உறவில் ஈடுபடும் திருமணமான பெண்ணுக்கு தனிப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருமணமான ஆணுடன், மற்றொருவரின் மனைவி முறை தவறிய உறவு வைத்துக் கொள்வது என்பது, அவரது கணவரின் மறைமுக ஒப்புதல் அல்லது அனுமதியுடன் நடப்பதாகவே கருதுகிறது. இந்த செயலை பாலியல் வன்கொடுமை குற்றமாகவும் குறிப்பிடவில்லை.
திருமண பந்தத்தின் புனிதம் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டப்பிரிவு சேர்க்கப்பட்ட விதம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14ஆவது பிரிவுக்கு (சமமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமை) எதிரானதாகத் தெரிகிறது. எனவே, இதுகுறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் நாங்கள் தொடர்பில் இல்லை! சிஜேபி

ஹார்ட் பீட் - 3 தொடரில் இணைந்த பிரபலம்! யார் இவர்?
அரசுப் பள்ளி சுற்றுச்சுவரில் 'ஜன நாயகன்' பட போஸ்டர்! வலுக்கும் எதிர்ப்பு!






