கே.எஸ்.ஹெக்டே பிறந்த நாள்:  நாடாளுமன்றத்தில் மரியாதை

மக்களவை முன்னாள் தலைவர் கே.எஸ்.ஹெக்டேவின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்தில் அவரது உருவப் படத்துக்கு தலைவர்கள், அதிகாரிகள் மலர் மரியாதை செலுத்தினர்.

மக்களவை முன்னாள் தலைவர் கே.எஸ்.ஹெக்டேவின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்தில் அவரது உருவப் படத்துக்கு தலைவர்கள், அதிகாரிகள் மலர் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் துணைப் பிரதமரும், மக்களவை நெறிகள் குழுத் தலைவருமான எல்.கே.அத்வானி பங்கேற்று கே.எஸ்.ஹெக்டேவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். மாநிலங்களவை செக்ரட்டரி ஜெனரல் தேஷ் தீபக் வர்மா மற்றும் மக்களவை,  மாநிலங்களவையின் மூத்த அதிகாரிகள் பலரும் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கே.எஸ். ஹெக்டேவின் வாழ்க்கை குறித்து மக்களவைச் செயலகத்தால் ஹிந்தி, ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட  சிறு கையேடு வழங்கப்பட்டது. 
கே.எஸ். ஹெக்டே  சிறந்த நாடாளுமன்றவாதியும்,  புகழ்பெற்ற சட்ட நிபுணரும் ஆவார்.  அவர் 1952-இல் முதல் முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1957-வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போதைய மைசூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  தனது பதவியை ராஜிநாமா செய்தார். 
தில்லி,  ஹிமாசலப் பிரதேசம் ஆகிய உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.  1967-இல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1973, ஏப்ரல் மாதம் வரை நீதிபதியாகப் பணியாற்றினார்.  
அதன்பிறகு, பெங்களூர் தெற்கு  தொகுதியில் இருந்து 6-ஆவது மக்களவைக்கு கே.எஸ்.ஹெக்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்.  நீலம் சஞ்சீவ் ரெட்டி பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து,  21.7.1977-இல் மக்களவைத் தலைவராக ஹெக்டே தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980,  ஜனவரியில் அப்பதவியில் இருந்து விலகிய பிறகு, கர்நாடகத்தில் தனது சொந்த ஊரில் வசித்து வந்த ஹெக்டே, 1990, மே 24-ஆம் தேதி காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com