/

குடியரசு தின விழா: இன்று முழு அணிவகுப்பு ஒத்திகை! போக்குவரத்துக் கட்டுப்பாடு அறிவிப்பு

இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி, முழு அணிவகுப்பு ஒத்திகை புதன்கிழமை (ஜன. 23) தில்லியில்

Updated On :23 ஜனவரி 2019, 6:10 am IST

இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி, முழு அணிவகுப்பு ஒத்திகை புதன்கிழமை (ஜன. 23) தில்லியில் நடைபெறவுள்ளது. இது குறித்து தில்லி காவல் துறை கூறியதாவது: 
விஜய் செளக்கிலிருந்து செங்கோட்டை வரை குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. விஜய் செளக்கிலிருந்து காலை 9.50 மணிக்கு ஒத்திகை தொடங்கும். எந்தவித இடையூறும் இன்றி அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் வகையில், நகரில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இதில், அணிவகுப்பு செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் ராஜபாதையிலிருந்து விஜய் செளக் முதல் இந்தியா கேட் வரை போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. புதன்கிழமை காலை 9 மணி முதல் அணிவகுப்பு ஒத்திகை திலக் மார்க் சென்றடையும் வரையிலும், சி-ஹெக்ஸாகான் - இந்தியா கேட் வரை போக்குவரத்து நிறுத்தப்படும். 
இதையடுத்து, காலை 10 மணி முதல் , திலக் மார்க், பிஎஸ்இஸட் மார்க், சுபாஷ் மார்க் ஆகிய பகுதிகளில் இரு மார்க்கங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்படும். மேலும், அணிவகுப்பு நடைபெறும் சூழலுக்கு ஏற்றவாறு போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
எனவே, அணிவகுப்பு நடைபெறும் காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பொதுமக்கள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கு ஏற்றவாறு முடிவு செய்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்: மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல இருக்கும். ஆனால், சென்ட்ரல் செக்ரடேரியட், உதய் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் பயணிகள் உள்ளே வருவதற்கோ, வெளியே செல்வதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
மேலும், அணிவகுப்பு ஒத்திகை முடியும் வரையிலும், இலகு ரக, கன ரக வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. அதே சமயம், வட்டச் சாலையில் ஐஎஸ்பிடி சராய் காலே கான், ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட் ஆகிய இடங்களில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் இலகு ரக, கன ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துளளது.

அணிவகுப்பில் முதல் முறையாக அஸ்ஸாம் ரைபிள்ஸ்  வீராங்கனைகள்
வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்புப் பேரணியில் துணை ராணுவப் படையான அஸ்ஸாம் ரைபிள்ஸ் பெண்கள் பிரிவு பங்கேற்கிறது. இந்த அணிவகுப்புக்கு மேஜர் குஷ்பு கன்வர் தலைமை வகிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "குடியரசு தின பேரணியில் ஒரு துணை ராணுவப் படையின் பெண்கள் பிரிவு பங்கேற்பது இதுவே முதல் முறை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.