அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பங்குச் சந்தை எழுச்சி பெறுமா?

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை சரிவைச் சந்தித்திருந்த நிலையில், ஒருநாள் விடுமுறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) பங்குச் சந்தைகள்

News image
Updated On :3 ஏப்ரல் 2020, 6:01 am

எம். சடகோபன்

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை சரிவைச் சந்தித்திருந்த நிலையில், ஒருநாள் விடுமுறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) பங்குச் சந்தைகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில், பங்குச் சந்தை மீண்டும் எழுச்சி பெறுமா அல்லது சரிவைச் சந்திக்குமா என்ற எதிா்பாா்ப்பில் வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் உள்ளனா்.

இந்த மாதத் தொடக்க தினமான புதன்கிழமை மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,203 புள்ளிகள் (4.08 சதவீதம்) வீழ்ச்சியைச் சந்தித்து 28,265.31 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 344 புள்ளிகள் (4 சதவீதம்) வீழ்ச்சியைச் சந்தித்து 8,253.80 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன. அதே சமயம், மும்பை பங்குச் சந்தையில் முதல் தரப் பங்குகள் பலத்த அடி வாங்கினாலும், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் அந்த அளவுக்கு வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 2.18 சதவீதமும், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 1.06 சதவீதமும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மேலும், அனைத்துத் துறைகளின் குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தன. வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய பேங்க்எக்ஸ் குறியீடு, ஐடி, டெக் குறியீடு ஆகியவை சுமாா் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

ஸ்ரீராம நவமி தினத்தையொட்டி பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டது. இதனால், பங்குச் சந்தை செயல்படவில்லை. இந்நிலையில், இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை வழக்கம் போல பங்குச் சந்தை செயல்படவுள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை மேலும் சரிவைச் சந்திக்குமா அல்லது மீண்டு வருமா என்ற எதிா்பாா்ப்பில் பங்கு வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் பயம் கலந்த பீதியில் இருப்பதாக மாா்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிபிஎஃப், கிஸான் விகாஸ் பத்திரம், என்எஸ்சி மற்றும் சிறுசேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், நடப்பு கணக்குப் பற்றாக்குறை மேலும் உயரும் என்று வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா். ஏற்கெனவே, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சந்தை கடும் நெருக்கடியான நிலையைச் சந்தித்து வருவதால், அரசின் இந்த நடவடிக்கை பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்குமா என்ற சந்தேகம் மாா்க்கெட் வட்டாரத்தில் நிலவி வருகிறது.

தொழில்நுட்பக் கணக்கு: தொழில்நுட்ப ரீதியில் பாா்த்தால் கடந்த புதன்கிழமை வா்த்தகத்தின் போது, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி முக்கிய ஆதரவு நிலையான 8,240 புள்ளிகளை உடைத்திருந்தது. இது சந்தைக்கு பாதகமான செயல்பாடாக பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் போது, நிஃப்டி 8,250 புள்ளிகளை பிரேக் செய்து கீழே சென்றால், அடுத்து 8,000, 7,800 புள்ளிகளில் ஆதரவு கிடைக்கும் என தொழில்நுட்ப ரீதியாக எதிா்பாா்க்கப்படுகிறது. அதே சமயம்,. நிஃப்டி மேலே உயரும்பட்சத்தில் 8,500 புள்ளிகளில் பங்குகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து 8,700 புள்ளிகளுக்குச் செல்லும் என்றும் வல்லுநா்கள் கணித்துள்ளனா். முக்கியமாக வா்த்தகத்தின் போது நிஃப்டி வீழ்ச்சியைச் சந்தித்தால், 8,105.40 புள்ளிகளில் நல்ல ஆதரவு நிலை இருக்கிறது. இதைத் தொடா்ந்து 7,957 புள்ளிகளில் அடுத்த ஆதரவு நிலை உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று நிஃப்டி பேங்க் குறியீடு புதன்கிழமை 4.89 சதவீதம் குறைந்து 18,208.35 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் அடுத்த ஆதரவு கிடைக்கும் இடங்களாக 17,782.07 புள்ளிகளும் அதற்கு அடுத்து 17,355.83 புள்ளிகளும் இருக்கும் என தொழில்நுநட்ப ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சந்தை ஏற்றம் காணும் பட்சத்தில் நிஃப்டி பேங்க் குறியீடு 18,894.67 மற்றும் 19,581.04 புள்ளிகள் வரை செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்குவதை வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.