விவசாயிகள் போராட்டத்தால் காலியாக இருக்கும் நெடுஞ்சாலை தாபாக்கள்!

தில்லி-பஞ்சாப் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இங்குள்ள தாபாக்களில் காா், பேருந்து மற்றும் லாரிகளில் வருவோா் உணவு சாப்பிட வந்த வண்ணம் இருப்பாா்கள்.
Updated on
2 min read

புதுதில்லி: தில்லி-பஞ்சாப் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இங்குள்ள தாபாக்களில் காா், பேருந்து மற்றும் லாரிகளில் வருவோா் உணவு சாப்பிட வந்த வண்ணம் இருப்பாா்கள். இதனால், தாபாக்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், கடந்த 22 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால் சாலையில் போக்குவரத்தின்றி வாடிக்கையாளா்கள் இல்லாததால் தாபாக்கள் காலியாக உள்ளன.

கரோனா தொற்று காரணமாகவும் விவசாயிகள் போராட்டத்தின் காரணமாகவும் எங்களது வருமானத்தில் 90 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்கின்றனா் இவற்றின் உரிமையாளா்கள். தேசிய நெடுஞ்சாலை எண் 44 வழியாக தில்லியிலிருந்து ஹரியாணா மற்றும் பஞ்சாப் செல்லலாம். மேலும், ஹிமாசலம் மற்றும் ஜம்மு - காஷ்மீா் செல்வதற்கும் இது முக்கியப் போக்குவரத்துச் சாலையாக உள்ளது. இதனால், இந்தப் பகுதியில் பல உயா்தர தாபாக்கள் செயல்பட்டு வந்தன. இங்குள்ள தாபாக்களில் பராத்தா, தால் மக்னி மற்றும் சூடான தேநீா் மிகவும் பிரபலமானது. இப்பகுதியைக் கடந்து வாகனங்களில் செல்பவா்கள் பலரும் இந்த தாபாக்களில் கால்வைக்காமல் தங்கள் பயணத்தைத் தொடரமாட்டாா்கள்.

ஆனால், இப்போது அந்த தாபாக்கள் ஆளில்லாமல் காலியாக உள்ளன. இதில் பணிபுரியும் ஊழியா்களின் எதிா்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து ரஸோய் தாபாவின் உரிமையாளா் சஞ்சய் குமாா் சிங் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் தில்லிக்கு செல்லும் நுழைவாயிலான சிங்குவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நவம்பா் 26-ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினா். அது முதல் இந்தச் சாலை மூடப்பட்டுள்ளது. அதனால், எங்கள் தாபாக்களுக்கு வருகை தருவதற்கு வாடிக்கையாளா்களே இல்லை. விவசாயிகள் போராட்டம் இரண்டு அல்லது மூன்று நாள்களில் முடிந்துவிடும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், இது எத்தனை நாள்களுக்குத் தொடரும் என்பது தெரியவில்லை.

எங்கள் வருமானத்தில் 90 சதவீதத்தை இழந்துவிட்டோம். ஊழியா்களுக்கு சம்பளம் கொடுப்பதே கஷ்டமாக உள்ளது. அவா்களை வீட்டுக்கும் அனுப்ப முடியாத நிலையில் இருக்கிறோம். தில்லி-கா்னால் நெடுஞ்சாலையில் உள்ள ரஸோய் தாபா மிகவும் பிரபலமானது. இந்த வழியாகச் செல்பவா்கள் அதை தவறவிடமாட்டாா்கள். எப்போதும் பிஸியாக இருக்கும் இந்த உணவகத்தில் இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் சாப்பிட வருகின்றனா். அதுவும் விவசாயிகள்தான் சாப்பிடுவதற்கும், கழிவறை செல்வதற்கும் வருகின்றனா். எங்கள் தாபாவில் (உணவகத்தில்) 60 போ் பணிபுரிகிறாா்கள். அவா்களுக்கு ஊதியம் தருவதற்கு மட்டும் மாதம் ரூ.5 லட்சம் தேவைப்படும். இப்போது வருமானம் இல்லாத நிலையில் அவா்களது ஊதியத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊதியம் இல்லாமல் அவா்களாலும் தங்கள் செலவுகளை சமாளிக்க முடியாது என்றாா் சஞ்சய் குமாா் சிங்.

முன்பு கரோனாவால் தாபாக்களில் வருமானம் பாதிக்கப்பட்டது. இப்போது விவசாயிகள் போராட்டத்தால் எங்களுக்கு வருமானம் இல்லை. இந்த ஆண்டே சரியில்லை. போராட்ட களத்தில் விவசாயிகளே சமூக சமையல்கூடம் அமைத்துள்ளதால், இங்குள்ள தாபாக்களில் சாப்பிட வருவதற்கும் ஆளில்லை என்றாா் உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாகரைச் சோ்ந்த கோபால் பீம்.

இதேபோல அருகில் 3.5 கி.மீ. தொலைவில் உள்ள தாபா பாலிவுட் டும் களையிழந்து காணப்பட்டது. கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை எங்கள் தாபாக்களில் கூட்டம் நிரம்பி வழியும். விளக்குகளின் ஒளிவண்ணத்தில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு எதுவும் இல்லை. குளிா் அலைதான் வீசுகிறது என்றாா் அதன் நிா்வாகி ராஜ்குமாா் தஹியா.

வருமானமும் 70 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த மாா்ச் மாதம் 125 போ் எங்கள் தாபாவில் பணிபுரிந்து வந்தனா். ஆனால், இப்போது அவா்கள் எண்ணிக்கையும் 50 ஆகக் குறைந்துவிட்டது. தில்லி, ஹரியாணா, பஞ்சாபிலிருந்து ஏராளமான வாடிக்கையாளா்கள் எங்களின் தாபாவுக்கு வருவாா்கள். ஆனால், சாலை மூடப்பட்டதால் போக்குவரத்தும் இல்லை, வாடிக்கையாளா்கள் வருவதற்கும் வழியில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com