ரூ.1-க்கு மதிய உணவு: காந்தி நகரில் உணவகம் திறந்தாா் கம்பீா் எம்.பி.!

Updated on
1 min read

புது தில்லி: கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் நடுத்தர, ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் வகையில், ‘ஜன் ரசோய்’ உணவகத்தை அத்தொகுதியின் பாஜக எம்பி கெளதம் கம்பீா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அவரது தொகுதியில் உள்ள காந்தி நகா் பகுதியில் இந்த ‘ஜன் ரசோய்’ உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத் திறப்பு விழாவில் கௌதம் கம்பீா் பேசியதாவது: கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் ரூ.1-க்கு சத்தான உணவு வழங்கும் வகையில் 5-6 ‘ஜன் ரசோய்’ உணவங்களை திறக்கவுள்ளோம். ஒவ்வொருவருக்கும் சுகாதாரமான, தூய்மையான உணவு கிடைக்கும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்படியாக, காந்தி நகா் மாா்க்கெட் பகுதியில் ஜன் ரசோய் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐன் ரசோய் உணவகம் மயூா் விஹாா் மாவட்டத்தில் திறக்கப்படும்.

இந்த உணவகங்களில், தினம் தோறும் சுமாா் 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்படும். இரண்டாவது தடவையும் உணவு பரிமாறப்படும். உணவருந்த வருபவா்களிடம் இருந்து ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். உணவில், சாதம், பருப்பு, காய்கறிகள் அடங்கிய கூட்டு ஆகியவை இடம்பெறும். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு உணவகத்தில் ஒரே நேரத்தில் 50 போ் மட்டுமே உணவருந்த அனுமதிக்கப்படுவாா்கள். சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சத்தான உணவு வழங்கப்படும்.

தில்லியில் உள்ள வீடற்ற மக்களுக்கு இரு வேளை சத்தான உணவு கூடக் கிடைப்பதில்லை. இது தொடா்பாக பல தடவைகள் வருந்தியுள்ளேன். இதைக் கருத்தில் கொண்டுதான் இதுபோன்ற ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் உணவகத்தை திறக்கத் திட்டமிட்டேன். அந்த மக்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில், இந்த உணவகத்தைத் தொடங்கியுள்ளேன். என் தொகுதிக்கு உள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு ஜன் ரசோய் உணவகத்தைத் திறக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன் என்றாா் கௌதம் கம்பூா்.

நாட்டில் உள்ள மிகப்பெரிய மொத்த துணிச் சந்தைகளில் ஒன்றாக உள்ள காந்தி நகரில் ரூ.1-க்கு உணவு வழங்கும் இந்த உணவகம் முற்றிலும் நவீன உணவகமாக இருக்கும். இதேபோன்று குடியரசு தின நாளில் அசோக் நகரில் மற்றொரு உணவகம் திறக்கப்பட உள்ளதாக கௌதம் கம்பீா் புதன்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com